நட்பு நாடுகளிடம் ஜனாதிபதி விசேட கோரிக்கை!

185 0

இலங்கையில் புதிய பிரதமரும் புதிய அமைச்சரவையும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு பாராளுமன்றத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 27வது சர்வதேச மாநாட்டில் (நிக்கேய்) காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.

இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கக்கூடிய சாத்தியமான உதவிகளை ஆராயுமாறு உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து நட்பு நாடுகளிடமும் கோருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடுகளில் இலங்கையும் ஒன்று எனவும் தற்போதைய தேசிய நெருக்கடிக்கான தீர்வுகள் அந்த ஜனநாயக கட்டமைப்பிற்குள் மேற்கொள்ளப்படுவது மிகவும் முக்கியமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தமை, வௌிநாட்டு தொழிலாளர்கள் பணம் அனுப்புவதில் ஏற்பட்ட வீழ்ச்சி, கடுமையான நிதி நெருக்கடி மற்றும் இலங்கையின் அதிக கடன் சுமையுடன் தொடர்புடைய நிகழ்வுகள் காரணமாக பணவீக்கம் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பொருத்தமான வேலைத்திட்டத்திற்கு அமைவாக எமது கடனாளிகளுடன் கலந்தாலோசித்து வெளிநாட்டு அரசாங்கக் கடனை மறுசீரமைக்கும் நோக்கத்துடன் இலங்கை கடந்த ஏப்ரல் மாதம் கடனை செலுத்தாமல் இருக்க தீர்மானித்ததாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இவ்வாறான தீர்வை நோக்கி செயற்படும் போது அத்தியாவசிய மருந்துகள், உணவு விநியோகம் மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்தல் போன்ற நாட்டின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதற்கு நட்பு நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு அவசரமாகத் தேவை என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையின் முக்கிய அபிவிருத்தி பங்காளியாக ஜப்பான் திகழ்வதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஜப்பானிடம் இருந்து நிதியுதவி வழங்குவது தொடர்பில் தற்போது நடைபெற்று வரும் கலந்துரையாடல்கள் விரைவில் முடிவடையும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மைக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஜப்பான் ஆதரவளிக்கும் என்று ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பாதிப்புகள், கொவிட் – 19 தொற்றுநோயின் நீண்டகால விளைவுகளின் முன்னறிவிப்பாகும் எனவும், இது ஐரோப்பாவில் ஏற்பட்ட மோதலால் தீவிரமடைந்தாகவும், பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு இந்த இக்கட்டான காலங்களில் இவ்வாறான பாதிப்புக்குள்ளாகும் நாடுகளுக்கு உதவுவது அவசியமானது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான பரந்த பிரச்சினைக்கு உலகம் முகம்கொடுக்கும் என்றும், எதிர்வரும் மாதங்களில் உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளில் பாரிய அதிகரிப்பு ஆகியவை பல நாடுகளுக்கு கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எனவே, இந்த முக்கியமான பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதும், உள்ளூர் விவசாய உற்பத்திக்கு முன்னுரிமை அளிப்பதும் மற்றும் வரவிருக்கும் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் நமது மீள்தன்மையை மேம்படுத்துவதும் இன்றியமையாதது எனவும், இந்தப் பிரச்சினைகளை சமாளிப்பதை உறுதிசெய்வதற்கு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.