மத்திய பொறிமுறையை நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன ! -ஜீ.எல்.பீரிஸ்

173 0

அரச நிறுவனங்களிடமிருந்து வரும் உதவிக்கான கோரிக்கைகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் நாட்டின் அவசரத் தேவைகளை அடையாளம் காண்பதற்கான மத்திய பொறிமுறையை நிறுவுவதற்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி அலகா சிங்குடன் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள், குறிப்பாக மருந்துப் பொருட்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பல சவால்களை அமைச்சர் சுட்டிக் காட்டியதுடன், இந்த கடினமான தருணத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதியின் அலுவலகம் முன்னெடுத்துள்ள செயலூக்கமான நடவடிக்கைகளுக்காக  நன்றி தெரிவித்தார்.

தற்போதைய சுகாதாரம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் முழுமையான ஆதரவை கலாநிதி. சிங் அமைச்சரிடம் உறுதிப்படுத்தினார்.

பல்வேறு அரச நிறுவனங்களிடமிருந்து வெளிப்படும் உதவிக்கான கோரிக்கைகளை ஒழுங்குபடுத்தும் மற்றும் நாட்டின் அவசரத் தேவைகளை அடையாளம் காண அனுமதிக்கும் மத்திய பொறிமுறையை நிறுவுவதற்கு முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

இது, இலங்கை தொடர்பில் கவனம் செலுத்தும் இலக்கு உதவிகளை வழங்குவதில் பலதரப்பு நன்கொடை நிறுவனங்கள், அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு உதவும்.

மருத்துவ சவால்களை எதிர்கொள்வதற்கும், அரச மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் அதிகபட்ச பலன் மக்களை சென்றடைவதை உறுதி செய்வதற்கு எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்த நிபுணத்துவத்தையும் அவர் வரவேற்றார்.

ஜூலை இறுதி வரையான காலப்பகுதி மிகவும் முக்கியமான காலப்பகுதியாகும். ஆகஸ்ட் முதல் அடுத்த ஆண்டு ஜூலை வரை நாட்டில் போதுமான மருத்துவப் பொருட்கள் இருக்கும் என்றும் கலாநிதி. சிங் தெரிவித்தார். தற்போது பல நாடுகளில்  இருந்து பல உதவிகள் பெறப்படுகின்றன

இந்த சூழலில், அவர்கள் இலங்கையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்துடன் இணைந்து நன்கொடைகள், குறிப்பாக தனியார் நன்கொடைகளுக்கான தளத்தை அமைப்பதில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.