லாப் காஸ் பயன்படுத்தும் 45இலட்சம் பயனாளிகளுக்கு காஸ் பெற்றுக்கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அழுத்தம் கொடுத்ததாலே 6நாட்களுக்குள் லாப் காஸ் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது என மனிதநேய கட்சியின் தலைவி பேராசிரியர் சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார்.
லாப் நிறுவனம் சமையல் எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கும் அறிவிப்பு தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் லிட்ராே மற்றும் லாப் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கே காஸ் விநியோகத்துக்கு அனுமதி வழங்கி இருக்கின்றது.
ஆனால் இன்று லிட்ராே காஸ் மாத்திரமே இறக்குமதி செய்து நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அதனால் லாப் காஸ் பயன்படுத்தி சமையல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் 45இலட்சம் பயனாளிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அரசாங்கம் இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தேன்.
இந்நிலையில் எதிர்வரும் 6நாட்களுக்குள் லாப் சமையல் எரிவாயு நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக லாப் நிறுவனம் நேற்று அறிவித்திருக்கின்றது.
அதற்காக அந்த நிறுவனத்துக்கு நன்றி தெரிவிக்கின்றேன். மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து லாப் காஸ் விநியாேகம் இடம்பெறுவதில்லை. சந்தையில் லிட்ராே காஸ் இருக்கின்றபோதும் லாப் காஸ் பயன்படுத்துபவர்களுக்கு அதனை பெற்றுக்கொள்ள முடியாது.
அத்துடன் நுகர்வோரிடம் இருக்கும் காஸ் சிலிண்டர் எந்தவகையாக இருந்தாலும் அவர்களுக்கு சந்தையில் இருக்கும் காஸை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்.
ஏனெனில் அனைவரும் பணம் கொடுத்தே காஸ் வாங்குகின்றனர். அவ்வாறான நிலையில் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் காஸ் பெற்றுக்கொடுப்பது பாரிய அநீதியாகும். லாப் காஸ் பயன்படுத்தும் 45 இலட்சம் மக்கள் தங்களது சிலிண்டர்களை பயன்படுத்த முடியாமல் ஒதுக்கி வைத்திருக்கின்றனர்
அரசாங்கம் லாப் காஸ் பயனாளிகளுக்கு பாரிய அநீதியை ஏற்படுத்தி வருகின்றது. பணம் கொடுத்து வாங்குவதற்கும் லிட்ராே சிலிண்டர் இல்லை, ; இது பாரிய அநியாயமாகும்.
அதனால் லிட்ராே அல்லது லாப் என எந்த வகையான காஸ் சிலிண்டர் இருந்தாலும் அவர்களுக்கு சந்தையில் இருக்கும் காஸை பெற்றுக்கொள்ள முடியுமான பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் ஏற்படுத்தவேண்டும் என்றார்.