யாழ் நூலக எரிப்பு, அடையாள அழிப்பின் ஆறா வடு! – யாழ் பொது நூலக எரிப்பின் 41 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி
“ஒரு இனத்தை அழிக்க முன் அதன் வேர்களை அழி” என்பார்கள். அந்த இனத்தின் அடிப்படை ஆதாரங்களையும், மூலங்களையும் அழிப்பது என்பது இன அழித்தொழிப்புக்கான முன்நிபந்தனையாகக் கொள்வார்கள். உலக வரலாறு முழுவதும் இத்தகைய போக்கைக் காண முடியும்.
யூதர்களின் மீது இன அழிப்பை மேற்கொண்டபோது ஹிட்லர் தனது நாசிப் படைகளை ஏவி யூதர்களின் படைப்புகளைத் தேடித் தேடி அழித்த செய்தியை நாமறிவோம்.
நூல்களை எரிக்கின்ற கொடுமையை, நாசிகள் எப்போதுமே புரிந்து வந்திருக்கிறார்கள். 1930களில் யூத மக்களின் நூல்களை வீதியோரங்களில் பகிரங்கமாக நாசிக்கள் எரித்து வந்தனர். 1933ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதியன்று ஹிட்லரின் பிரச்சார அமைச்சரான கோயபல்சின் உத்தரவின் பிரகாரம் பெர்லின் நூல்நிலையத்திற்குச் சென்ற நாசிகள் அங்கிருந்த சகல நூல்களையும் எரித்தார்கள். ஒரே ஒரு வித்தியாசம் தான்! இலங்கையில் சிங்கள நாசிகள் செய்ததுபோல, அவர்கள் பேர்லின் நூல் நிலையத்தை எரிக்கவில்லை.
அதன் வழியில் யாழ் நூலக எரிப்பும் 1981ம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி சிங்கள காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட அனுபவமும் தமிழ் மக்களுக்கு உண்டு.
உலகம் முழுவதும் பாசிஸ்டுகள் இன அழிப்பின் வடிவமாகவே எதிர் இனத்தின் பண்பாட்டம்சங்களையும், வரலாற்றையும், வரலாற்று சுவடுகளையும், கலாசார விழுமியங்களையும், இன அடையாளத்துக்கான அடிப்படை ஆதாரங்கள் அனைத்தையும் சின்னாபின்னபடுத்துவத்தையும் ஒரு வழிமுறையாகவே கொண்டிருக்கிறது. இதனை ஒரு போர் யுக்தியாகவே கைகொள்கின்றார்கள்.
வரலாற்றை அழிப்பது, சிதைப்பது, மறைப்பது, மறுப்பது என்கிற நிலைகளில் இன அழிப்பாளர்களின் வியூகங்கள் அமைந்துவிடுகின்றன. இலங்கையில் தமிழ் மக்களின் மீதான அழித்தொழிப்பும் இந்த வடிவங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
யாழ் பொது நூலக எரிப்பு என்பது ஈழத்தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத அரசு மேற்கொண்ட இனவழிப்பில் முக்கிய நிகழ்வாகும். .நாசி படைகளால் யூத மக்களின் நூல்கள் எரிக்கப்பட்ட வரலாற்று வளாகத்தில்(Bebelplatz ) எதிர்வரும் 31.05.2022 அன்று மதியம் 17:30முதல் 19 மணிவரை யாழ் பொது நூலக எரிப்பின் 41 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கண்காட்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் / அடையாளத்தையும் குறித்து நிற்கிறது.அதைப் பேணுவதுதான் இந்த நாளின் முதன்மை நோக்கமும் / முக்கியத்துவமும் கூட.
‘ஒரு இனத்தை அழிக்கப் போகிறாயா? முதலில் அவர்களின் மொழியை அழி’ என்ற இன அழிப்புச் சூத்திரத்திற்கு அமைவாகத்தான் இன அழிப்பு அரசு அன்று தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தது.பின்பு தரப்படுத்தல் / யாழ் பொது நூலக எரிப்பு/ முள்ளிவாய்க்கால் தொடக்கம் இன்று வரை மொழி அதன் இலக்காகவே இருந்து வருகிறது.இனம்/மொழி/நிலம்/பண்பாடு என்ற அடிப்படையிலேயே முள்ளிவாய்க்கால் இன அழிப்பு அமைந்திருந்தது..
ஆனால் இன்றும் இலங்கைத் தீவில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு பகுதியாக தமிழ் மொழி இலக்கு வைக்கப்பட்டு எமது அடையாளமும்/ தனித்துவமும்/ பண்பாடும் அழிக்கப்பட்டு வருகிறது.
எனவே நாம் ஒவ்வொருவரும்தான் தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை அனைத்து வழிகளிலும் கட்டிக் காத்து இன அழிப்பிலிருந்து எமது மண்ணையும் மொழியையும் மீட்டெடுக்க வேண்டும்.
இக் கண்காட்சியை வேற்றின மக்கள் மட்டும் அல்ல பேர்லினில் பிறந்து வளர்ந்து வரும் ஒவ்வொரு தமிழ் சிறார்களும் பார்வையிட வேண்டும். அந்தவகையில் அச் சிறார்களுக்கான விளக்கங்களும் தமிழ் இளையோர் அமைப்பினால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழே எங்கள் உயிர் மூச்சு!.