கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானத்தை வரவேற்கின்றோம்!-சுகாஷ்

247 0

கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை பற்றிய தீர்மானத்தினை வரலாற்று ரீதியில் ஒரு முக்கியமான தீர்மானமாக பார்ப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய ஊடகப்பேச்சாளர் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினுடைய அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுகாஷ் இதனைத்தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஈழத்திலே அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக கனேடிய நாடாளுமன்றத்திலே கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணையை நாடாளுமன்றம் ஏற்று இனப்படுகொலை என்பதை அங்கீகரித்திருக்கிறது. இதை ஈழத்தமிழர்கள் சார்பாகவும்,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பாகவும், பாதிக்கப்பட்ட உறவுகள் சார்பாகவும் நாங்கள் வரவேற்கின்றோம்.

இந்த தீர்மானத்திற்காக உழைத்த அத்தனை பேரையும் வாழ்த்துகின்றோம். அவர்களுக்கு எங்களுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த தீர்மானத்தோடு மாத்திரம் நின்றுவிடாது , ஈழத்திலே அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடாத்தப்படுகின்றவரை இந்த தீர்மானத்திற்கு பின்னால் இருக்கின்ற அத்தனைபேரும் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என்று ஈழத்தமிழினத்தின் சார்பில் நாங்கள் வேண்டிநிற்கின்றோம்.

கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானத்தை வரவேற்கின்றோம்!சுகாஷ்

இந்த தீர்மானத்தை நாங்கள் ஒட்டுமொத்தமாக கனேடிய அரசாங்கத்தினுடைய உத்தியோக பூர்வ நிலைப்படாடாக கருதமுடியாவிட்டாலும் இது எதிர்கால கனேடிய அரசாங்கத்தினுடைய முடிவுகள் மற்றும் செயற்பாடுகளில் காத்திரமான செல்வாக்கை செலுத்தும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. அதேநேரம் உலகிலே பல்வேறுபட்ட நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு இந்த தீர்மானம் ஒரு காத்திரமான செய்தியை சொல்லியிருக்கிறது.

இது போன்றதான காத்திரமான நடவடிக்கைகளை தாங்கள் சார்ந்த நாடுகளிலும் அவர்கள் சார்ந்த சட்ட சபைகளிலும் இதற்கான நகர்வுகளையும் முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ளவேண்டும் என்கின்ற உந்துதலையும் வழங்கியிருக்கிறது.

மேலும் 2009 முதல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, இனப்படுகொலை சம்மந்தமாகவும் இனப்படுகொலைக்குரிய தீர்வுகள் சர்வதேச விசாரணை மூலமாக வழங்கப்பட வேண்டும் என்பதையும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

இதனை தொடர்ச்சியாக ஏளனமாகவும், கேளிக்கைக்குரிய ஒரு விடயமாகவும் பார்த்தது மட்டுமல்லாமல் ஈழத்தில் நடைபெற்றது ஒரு போர்க்குற்றம் என்ற அடிப்படையிலும் இனப்படுகொலை நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்பதுடன் ,இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையினை கோருவதற்கான வாய்ப்புக்களும் ஆதாரங்களும் அறவே இல்லை என்பதை கூறிவந்த சகல தரப்பினருக்கும் இது ஒரு காத்திரமான செய்தியினைச் சொல்லியிருக்கிறது.

ஆகவே இந்த இடத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினுடைய இனம் சார்ந்த நடவடிக்கைகளையும் முன்னெடுப்புக்களையும் ஈழத்தமிழ் மக்களும் புலம்பெயர் தேசத்திலுள்ளவர்களும் உணர்ந்து கொண்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினை பலப்படுத்துவார்கள் என நாம் நம்புகின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உருவாக்கத்திற்கும் மணிவண்ணனுக்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது.கட்சி உருவாக்கப்பட்ட பின்னர் ஒரு வேட்பாளராகவே சிலரால் கொண்டுவரப்பட்டு அறிமுகப்படுத்த ஒருவரே மணிவண்ணன் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவின் தீர்மானத்தையும் மதிக்காமல் மத்திய குழு தேவை இல்லையென இருந்துவிட்டு தங்கள் முகமூடிகள் எல்லாம் பறந்து போயுள்ள நிலையில், அவர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியை விட்டு நீக்கிய முடிவு சரியானது என்பதை அனைவருமே வெளிப்படையாக கூறத் தொடங்கியுள்ளனர்.

மாநகரசபையில் தமிழினப் படுகொலை செய்ய பங்காளிகளாக இருந்த ஈபிடிபியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது மட்டுமல்லாமல் தங்களுடைய பதவிக்காக டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவோடு இணைந்து செயற்படுவதால் இவர்கள் யார் என்று தெரிந்து விட்டது.

ஆரியகுளத்தைப் புனரமைத்து சிங்கள தேசியவாத வளர்ச்சிக்கும இவர்கள் மறைமுகமாக ஆதரவு வழங்குகின்றனர். அவரது வெளிநாட்டுப் பயணமும் பிசுபிசுத்துப் போயுள்ள நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் தமிழ் தேசிய முலாம் பூசி தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பயன்படுத்த வேண்டியுள்ளது.

இவ்வளவு காலமும் மறந்து போய் அதை தூசு தட்டமுற்படுகின்றார்கள். தமிழ் தேசிய மக்கள் முன்னணியை அவர் உருவாக்கியதாக கூறுவது அப்பட்டமான பொய். நாங்கள் சட்ட மாணவர்களாக இருந்த போது இந்த கட்சியை உருவாக்கியது.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன், மறைந்த பேராசிரியர் கென்னடி ஆகிய நான்கு பேருமே ஆகும். கட்சியின் உருவாக்கத்திற்கும் மணிவண்ணனுக்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது. அந்த நேரத்தில் ஒரு வேட்பாளராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சியின் உருவாக்கப்பட்ட பின்னர் சிலரால் கொண்டுவரப்பட்டு அறிமுகப்படுத்த ஒருவரே மணிவண்ணன் என்றும் தெரிவித்துள்ளார்.