சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் பேச்சு பயிற்சி வகுப்பு- தொலைதூர கல்வி திட்டம் மூலம் தொடங்க முடிவு

195 0

தமிழ் பேசுவதற்கான பாடத்திட்டம் எளிதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம் 15 பிரிவுகளாக பிரித்து நடத்தப்படும்.சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி திட்டத்தில் தமிழ் பேசுவதற்கான பாட வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தை சாராத பிற மாநிலத்தவர்கள் தமிழ் பேசுவதற்கு வசதியாக இப்பாடத்திட்டத்தை செயல்படுத்த பல்கலைக்கழகம் ஆலோசித்து வருகிறது.

சான்றிதழ் படிப்பாக இதனை செயல்படுத்த பல்கலைக்கழக திட்டமிட்டுள்ளது. வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் தெரியாமல் வங்கிகள் மற்றும் பிற அலுவலகங்களில் பணியாற்றுவதால் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். அதனை நிவர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தேசிய வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களில் சிலர் தமிழ் பேச முடியாமல் வாடிக்கையாளர்களை எதிர்கொள்ள முடியாமல் சேவை ஆற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் அவர்களுக்கு தமிழ் பேசுவதற்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற வங்கிகள் தரப்பில் கொடுத்த வேண்டுகோளை ஏற்று இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தொலைதூரக் கல்வி இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தொலை தூரக்கல்வி இயக்குனர் ரவிச்சந்திரன் கூறுகையில், தமிழ் பேசுவதற்கான பாடத்திட்டம் எளிதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம் 15 பிரிவுகளாக பிரித்து நடத்தப்படும். ஒவ்வொரு பிரிவு வகுப்பும் 1½ மணி நேரம் நடக்கும். ஆன்லைன் வழியாக நடத்தப்படும் இந்த வகுப்பு வார இறுதியில் நடத்தப்படும். பல்கலைக்கழகத்தில் உள்ள திறன் உள்ள பேராசிரியர்கள் மூலம் தமிழ் மொழி பேசுவதற்கு பயிற்சி வழங்கப்படும் என்றார்.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி கூறியதாவது:-

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஆங்கிலம் பேசுவதற்கான பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வை எளிதாக கையாளும் வகையில் மாணவர்களுக்கு அடிப்படையான ஆங்கிலம் பேசும் பயிற்சி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.