முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ரெயில்வே ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து பேசினார்.
அப்போது அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் குண்டுவெடிக்கும் என்று கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை காவலர்கள் இது பற்றி தேனாம்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்-அமைச்சரின் வீட்டுக்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சந்தேகப்படும் படியான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதன்பிறகே போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
மிரட்டல் விடுக்கப்பட்ட போன் நம்பரை வைத்து துப்பு துலக்கப்பட்டது. அப்போது மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது அடையாளம் தெரிந்தது. அவரது பெயர் அந்தோணி ராஜ். தென்காசி மாவட்டம் ஆழ்வார் குறிச்சியை சேர்ந்த இவர் நில பிரச்சினை தொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் செய்துள்ளார்.
ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் போலீசாரின் கவனத்தை தன்பக்கம் திருப்பும் நோக்கத்தில் முதல்-அமைச்சரின் வீட்டுக்கு அந்தோணி ராஜ் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அந்தோணி ராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர் ரெயில்வே ஊழியர் ஆவார்.