மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மீன்பிடி துறைமுகத்தில் இருந்த படகு ஒன்றில் இருந்து 9 கிராம் 210 மில்லிகிராம் ஹரோயின் மற்றும் ஒரு கிராம் 110 மில்லிக்கிராம் ; ஐஸ் போதை பொருள் ஞாயிற்றுக்கிழமை (22) மாலை மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
இதன்போது 24 வயதுடைய போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவின் இரகசிய தகவலையடுத்து விசேட அதிரடிப்படையுடன் இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை மாலை வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திர படகான றோலர் படகினை முற்றுகையிட்டு சோதனையிட்டனர்.
இதன் போது அங்கு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிறைந்துறைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய போதைப்பொருள் வியாபாரியை கைதுசெய்தனர்.
இதன்போது அவரிடமிருந்து 9 கிராம் 210 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் ஒரு கிராம் 110 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளையும் மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
>இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்