இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் 75 நாட்கள் அல்ல 75 மணித்தியாலங்கள் கூட மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. எனவே வடக்கு மீனவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர,
அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் வருடமொன்றிற்கு 75 நாட்கள் மீன்பிடிப்பதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்து வடபகுதி மீனவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அரசின் நிலைப்பாடு தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்,
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு ஒரு வருடத்தில் 75 நாட்களுக்கு மீன்பிடிப்பதற்கு அனுமதியை அரசு வழங்கியிருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை. அரசாங்கம் இது தொடர்பில் எந்தவிதமான தீர்மானத்தையும் எடுக்கவில்லை. பலர் பலவிதமான கருத்துக்களையும் யோசனைகளையும் முன்வைக்கின்றனர். ஆனால் இறுதி முடிவை அரசுதான் எடுக்கும்.
அதேவேளை அத்துமீறும் மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் தொடரும். அதில் எந்தவிதமான தளர்வுப் போக்கும் கடைபிடிக்கமாட்டாது, கைதுசெய்யப்படும் இந்திய மீனவர்களை விடுவிப்போம். ஆனால் கைப்பற்றப்பட்ட அவர்களின் படகுகள், வலைகள் மற்றும் உபகரணங்கள் மீளக் கையளிக்கப்படமாட்டோம் என்ற தீர்மானத்தில் நாம் திடமாக இருக்கின்றோம்.
எனவே வடபகுதி மீனர்வர்கள் எவ்விதமான அச்சம் கொள்ளத் தேவையில்லை. எந்தவொரு முடிவெடுத்தாலும் மீனவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியே தீர்மானம் எடுப்போம் என்றும் அமைச்சர் மஹிந்த சமரவீர குறிப்பிட்டார்.