தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்று முதல் அமுல்

268 0

அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்று(3) முதல் அமுல்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், இந்த சட்டத்தின் மூலம் அரசாங்கம் நிதியை பயன்படுத்தும் விதம், தீர்மானங்களை மேற்கொள்ளும் விதம் தொடர்பாக மக்கள் தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

எமது நாட்டில் தகவல் அறியும் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்த பேச்சுவார்த்தைகள் பல காலங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், கடந்த ஓகஸ்ட் மாதமே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

தகவல் அறியும் உரிமை சட்டமூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதோடு, அது நிறைவேற்றப்பட்டு 6 மாத காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் நாளை 6 மாதங்கள் பூர்த்தியடையவுள்ள நிலையில், இன்று இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், சுதந்திர தினத்திற்கு முதல்நாள் மக்களுக்கு தகவல்களை அறிந்துக் கொள்வதற்கான சுதந்திரம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.