போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்ற நிலையில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சர்வதேச விசாரணையை இறுக்கமாகப் பிடித்திருப்பது போல பேச்சுக்களை வெளியிடுவதால் அதிகாரப் பரவல் குறித்து ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கும் நிலையே அரசாங்கத்திற்கு ஏற்படும் என தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, விக்னேஸ்வரனைப் பதவியில் இருந்து இறக்க அரசும் மக்களும் தயாராக வேண்டும் எனவும் குறிப் பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள கட்சியின் தலை மையகத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.இதில் பிரதியமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே மற் றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் தயாசிறி,
புதிய அரசியலமைப்பு மற்றும் போர்க் குற்றம் தொடர்பான வெளிநாட்டுத் தலையீடு இன்றிய உள்ளக விசாரணை போன்ற அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பகிரங்கமாக விமர்சனம் செய்து வருகின்றார்.
தமிழ் மக்களினால் தெரிந்தெடுக்கப்பட்ட தலைவர் ஒருவரது கூற்று இவ்வாறு இருக்கின்ற நிலையில் அரசாங்கத்தின் எதிர்கால முயற்சி இடர்பாடுகளுடையதாக மாறும்.இவ்வாறான கருத்துக்கள் விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்களே வெளியிடுவார்கள் என்பது எமக்குத் தெரிந்த விடயம்.
இவை தொடர்ந்தும் இடம்பெற்றால் புதிய அரசியலமைப்புக்கு கை உயர்த்துவதா இல்லையா என்பது குறித்து தனிப்பட்ட ரீதியில் முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம்.
இவர்கள் கூறுவது சாதாரண தமிழ் மக்களின் எண்ணத்தையல்ல. ஐக்கிய இலங்கைக்குள் சமாதான ரீதியில் அதிகாரப் பரவல், அன்றன்ற நாட்களில் பிரச்சினைகளுக்குத் தீர்வு, பொருளாதார தீர்வு என்பதையே தமிழ் மக்கள் விரும்புகின்றனர்.
சமஷ்டி தீர்வு தேவையில்லை, மாறான ஐக்கிய இலங்கைக்குள்ளான தீர்வே வேண்டும் என்று த.தே. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஒருமித்து கூறுகின்றனர்.
உள்ளகப் பொறிமுறை குறித்து அவர்களுக்குப் பிரச்சினை இருக்கலாம். ஆனால் நாட்டின் இறை யான்மையையும், ஐக்கியத்தை யும் காட்டிக்கொடுக்க நாம் தயாரில்லை. நாட்டில் எமக்குத் தேவையான நீதிபதிகள் உள்ளனர்.
இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து நீதிபதிகளை அழைக்க முடியாது. முரண்பாடாக வடக்கு முதல மைச்சர் கூறுகின்ற கூற்றுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை எமக்கில்லை.
இவ்வாறான கூற்றுக்களை அவர் வெளியிடுவதனால் சமாதான முறையில் தமிழ் மக்களுடன் நாங்கள் செய்துகொள்ள விரும்பும் அரசியல் கொடுக்கல் வாங்கலுக்கு சவால் ஏற்படுகிறது.
இதனால் சிங்கள தமிழ் இனவாதிகளுக்கு சக்தி அதிகரிக்கும். விக்னேஸ்வரன் இனவாதத்தையே ஊக்குவிக்கின்றார்.
எனவே நாட்டு மக்களிடம் நான் கேட்டுக்கொள்வது என்ன வென்றால் இவ்வாறானவர்களின் பதவி பறிக்கப்பட வேண்டும் என்பதே.
விக்னேஸ்வரன் போன்றவர்கள் இவ்வாறு கூறுகையில் ஜனாதிபதி முறைமை பற்றி சிந்திப்பதற்கு நாங்கள் தள்ளப்படுகின்றோம். ஜனாதிபதி முறையை முற்றாக நீக்கப்பட இன்னும் சிறிது காலம் எடுக்கலாம். ஆனால் வடக்கில் முதலமைச்சர் கத்துவது பற்றி எனக்கு முழுமையாக கூறமுடியாது. எனினும் அவர் கூறுவது அனைத்தும் தவறானதாகும்.
நாங்கள் அதிகாரத்தைப் பகிர முற்படுகையில் வட மாகாண முதலமைச்சரின் கூற்றுக்களை உதாரணப்படுத்தும் சர்வதேசம் இதனை எவ்வாறு செய்ய முடியும் என்று வினா எழுப்பும்.
எனவே அனைத்துக்கும் முன்னதாக வடக்கு முதலமைச்சரை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் அவர் பூதாகாரமாக உருவெடுத்து விடுவார் என அமைச்சர் தயாசிறி தெரிவித்துள்ளார்.