சட்டபூர்வமான நிதிப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு நாடு முகங்கொடுத்துள்ள அந்நியசெலாவணி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு கைகொடுக்க வேண்டும் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களிடத்தில் கல்முனை மாநகரத்தின் பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் பகிரங்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
நாடு வரலாற்றில் என்றுமில்லாதவாறு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
மத்திய வங்கியினால் ஒரு மில்லியனை கூட திரட்டிக்கொள்ள முடியாத நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. கொழும்புத் துறைமுகத்தில் ஒருவாரத்திற்கும் மேலாக கப்பல்கள் தரித்து நிற்கின்றன. எரிவாயு, எரிபொருள் ஆகியவற்றுடன் அவை நிற்கின்றன.
அக்கப்பல்களுக்கான கட்டணங்களை செலுத்துவதற்கான கடன்பத்திரங்களை திறக்க முடியாத நிலைமை டொலர்கள் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ளது. அத்துடன் 14வகை அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் நீடிக்கின்றன.
இவ்வாறான நிலையில் அரசியல், விருப்புவெறுப்புக்களுக்கு அப்பால் நாட்டின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. எதிர்கால சந்ததியினர் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
சுற்றுலாத்துறையும், உற்பத்தித் துறையும் முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்கள் ஊடாக நாட்டுக்குள் வருகைதரும் வருமானம் மட்டுமே சற்றேனும் நாட்டுக்கு கைகொடுப்பதாக உள்ளது.
ஆகவே வெளிநாடுகளில் பணிபுரிகின்ற உறவுகள் நாட்டின் எதிர்கால சந்ததியினரைக் கருத்திற் கொண்டு சட்டரீதியான நணயப்பரிமாற்றத்தில் ஈடுபட வேண்டும் என்று விநயமாக கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது.