சுதந்திர தினத்தன்று யாழில் கறுப்புப்பட்டி போராட்டம்!

272 0

ஐந்து அம்சக்கோரிக்கையினை முன்வைத்து சுதந்திர தினமான நாளை சனிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக கறுப்புப்பட்டி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம் மற்றும் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

நாளை சனிக்கிழமை இலங்கையின் 69ஆவது சுதந்திரதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாத நிலை காணப்படுகிறது.

இலங்கையர்கள் என்ற ரீதியில் தமிழ் மக்கள் சுதந்திர தினத்தை கொண்டாட முடியாத நிலையில்தான் உள்ளார்கள். எனவே தமிழ் மக்களுடைய பிரச்சினைகள், இலங்கை அரசினாலும் அதன் படைகளாலும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரியும் சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி இந்த கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

காணாமல் போனவர்கள் விடயம் பதில் கூறுஇ தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்இ மீளக் காணிகள் சுவீகரிக்கப்படக் கூடாது, இனப்படுகொலைக்கு நீதி, சர்வதேச விசாரணை போன்ற கோரிக்கையை முன்வைத்து நாளை காலை 8 மணி தொடக்கம் 10 மணிவரை யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக அமைதியான போராட்டம் ஒன்று முன் னெடுக்கப்படவுள்ளது.

அதேவேளை, எதிர்வரும் 09 ஆம் திகதியும் யாழ்.மாவட்டத்தில் மேலும், ஆயிரத்து 505 ஏக்கர் காணிகளை முப்படைக்கும் வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 09ஆம் திகதி காணி ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு வருகை தரவுள்ளார்.

மேற்படி வருகையின் போது, காணி ஆணையாளர் உட்பட அரச அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அந்த கலந்துரையாடலுக்கு பொது மக்களுக்கு அழைப்பு விடுக்காமல், அரச அதிகாரிகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளது.

எத்தனை ஆயிரம் மக்கள் ஒரு துண்டு நிலம் கூட இல்லாமல் இருக்கின்ற நிலைமையில், இராணுவத்தினருக்கு 700 ஏக்கர் விமானப்படைக்கு 600 ஏக்கர் கடற்படைக்கு 300 ஏக்கர் காணி வழங்குவதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது. இவ்வாறான காணி சுவீகரிப்பினை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எதிர்வரும் 9ஆம் திகதி யாழ்.மாவட்ட செயலகத்தினை போர்க்களமாக மாற்ற வேண்டாம்.

எமது எச்சரிக்கையை மீறி செயற்பட்டால், மக்களை கிளர்ந்தெழச் செய்வோம். எந்த விளைவுகளையும் எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம். எனவே, ஜனாதிபதி மற்றும் பிரதமர் காணி சுவீகரிப்பினை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிடின், தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் என தெரிவித்துள்ள அவர்கள், இந்த போராட்டத்திற்கு காணாமல்போனோருடைய உறவுகள், காணிகளை பறிகொடுத்தோர், அரசியல் கைதிகளின் உறவினர்கள், மற்றும் போரால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அமைதி வழியில் இடம்பெறவுள்ள இந்த போராட்டத்தை பொலிஸாரும் புலனாய்வு பிரிவினரும் குழப்பும் வகையில் செயற்படக்கூடாது எனவும், அவ்வாறு குழப்பும் வகையில் செயற்பட்டால் நாங்களும் அதனை எதிர்கொள்ளவதற்கு தயாராகவே உள்ளோம் என வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.