விழுப்புரம் மாவட்டத்தில் தீபா பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கை

304 0

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்திலும் அனைத்து தொகுதிகளிலும் தீபா பேரவைக்கு உறுப்பினர்கள் தீவிரமாக சேர்க்கப்பட்டு வருகிறார்கள். திருச்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.சவுந்தர்ராஜன் தலைமையில் செயல்படும் தீபா பேரவை அமைப்பினர் உறுப்பினர் படிவங்களை தீபா ஆதவாளர்களிடம் வழங்கி வருகின்றனர்.

இதுதொடர்பாக தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் திண்டிவனம் அன்பு கூறியதாவது:-

திண்டிவனம், மயிலம், விக்கிரவாண்டி, மரக்காணம், வானூர், செஞ்சி, மேல்மலையனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீபா ஆதரவாளர்களிடம் 1000-க்கும் மேற்பட்ட உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டுள்ளது. திண்டிவனத்தில் அனைத்து வார்டுகளிலும் உறுப்பினர் படிவங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

தீபா பேரவையில் அ.தி.மு.க.வினர் ஆர்வமாக சேர்ந்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வருகிற 5-ந் தேதி தீபா தலைமையில் சென்னையில் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்துக்கு பின்னர் தீபா பேரவைக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி மேலும் தீவிரமடையும். இவ்வாறு அவர் கூறினார்.

விழுப்புரம் சட்டமன்ற தொகுதியிலும் தீபா பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.விழுப்புரம் பாப்பான் குளத்தை சேர்ந்த ஹயத்கான் விழுப்புரத்தில் 5, 6, 19 வார்டுகளிலும் சோழகனூர் திருவாமாத்தூர் பகுதியிலும் தீபா பேரவைக்கு உறுப்பினர்களை சேர்த்துள்ளார்.

விழுப்புரம் சிக்னல் அருகில் மணிகண்டன் என்பவர் தீபாவுக்கு ஆதரவாக டிஜிட்டல் பேனர் வைத்துள்ளார். விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்த ஆறுமுகம் தீபாவுக்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். விலகி அ.தி.மு.க.வை தொடங்கிய போது நான் அந்த கட்சியில் இணைந்தேன். பின்னர் அ.தி.மு.க. உடைந்து ஜெயலலிதா அணி, ஜானகி அணி ஏற்பட்டபோது நான் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டேன்.

ஜெயலலிதாவின் ஒரே அரசியல் வாரிசு தீபாதான் அவர் கரத்தை வலுப்படுத்த பாடுபடுவேன். வழுதாவூரில் நாளை தீபா பேரவை தொடக்க விழாவை நடத்த உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.