மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 12 ஆண்டுகளின் பின்னர் 13 ஆண்டு நினைவேந்தல் என்றும் இல்லாத வகையில் தென்னிலங்கை சிங்கள சகோதரர்களால் காலிமுகத்திடலில் இம்முறை நிகழ்த்தப்பட்டமை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதிக்கான ஔிக்கீற்று தென்படுவதை உணர வைத்துள்ளது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அதே நேரம் தொடர்ந்து ராஐபக்ச குடும்பத்திற்கு துதி பாடி அவர்களின் அடாவடிகளை மூடி மறைக்கும் தமிழ்க் குழுக்களுக்கும் அவர்கள் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் செருப்படியாகவே காலிமுகத்திடல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சிங்கள மக்களால் நடைபெற்றுள்ளது.
கடந்த காலத்தில் குறிப்பாக 2009 முள்ளிவாய்க்காலில் பாரிய தமிழினப் படுகொலையை ராஐபக்ச அரசாங்கம் அரங்கேற்றும் போது துதி பாடிய தமிழ்க் குழுக்களுள் அவர்களுடன் இணைந்து பாற்சோறு கொடுத்தும் யாழில் வெடி கெளுத்தி கொண்டாடியவர்கள் விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் பதவிகளுக்காக தமிழ்த் தேசியத்தை விலை பேசியவர்கள் எல்லோருக்கும் காலிமுகத்திடல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தக்க பதிலடியை கொடுத்துள்ளது.
மாறி வரும் உலகில் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையை முதன் முதலாக கனடா பாராளுமன்றம் அங்கிகரித்துள்ளது ஈழத் தமிழர்களுக்கான நீதியின் கதவுகள் மெல்லத் திறப்பதற்கான ஏது நிலைகள் உருவாகியுள்ளது.
இதனால் எதிர்காலத்தில் ராஐபக்ச அரசும் அதன் துதிபாடும் தமிழ்க் குழுக்களும் இலங்கை மக்களால் விரட்டப்படுவர் எனவும் தெரிவித்தார்.