வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் கடமையாற்றும் சமுர்த்தி அலுவலகரினால் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பாக ஐந்து கிராம அமைப்புக்கள் ஒன்றிணைந்து பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றினைக் கையளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
“பட்டாணிச்சூர் பகுதியில் கடமையாற்றி வரும் சமுர்த்தி அலுவலரினால் சமுர்த்திப் பயனாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு உட்பட பயனாளர்கள் தெரிவு போன்ற பல்வேறு நடவடிக்கையில் பல முறைகேடுகள் இடம்பெற்று வருகின்றன.
இது குறித்து பல ஆதாரங்களுடன் குறித்த சமுர்த்தி அலுவலருக்கு எதிராக பிரதேச செயலாளர் உள்ளிட்ட சமுர்த்தி வங்கி முகாமையாளர், சமுர்த்தி மகாசங்க முகாமையாளர், தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் மாவட்ட அரசாங்க அதிபர் போன்றவர்களிடம் நேற்று முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு வறுமைப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவு மற்றும் பயனாளர்கள் தெரிவில் இடம்பெற்றுவரும் முறைகேடுகளை ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளோம். எனவே இவ்வாறான உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறு” மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.