தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் பகிரங்கமாக செயல்பட்டு வருகின்றன: எச்.ராஜா

280 0

மதுரை மற்றும் சென்னை திருவான்மியூரில் 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக்தில் தீவிரவாத அமைப்புகள் பகிரங்கமாக செயல்பட்டு வருவதை உறுதி செய்துள்ளது என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

திருச்சியில் பாரதிய ஜனதா நிர்வாகி ஸ்ரீதர் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.இதில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

1984 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் மையம் கொண்டுள்ள தீவிரவாத இயக்கங்கள் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனை தடுப்பதற்கும், முறியடிப்பதற்கும் தைரியம் இல்லாத காவல் துறையினர் ஸ்ரீதர் மறைவு நாளை முன்னிட்டு நடக்க இருந்த அஞ்சலி ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்துவிட்டது.

மதுரை மற்றும் சென்னை திருவான்மியூரில் 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக்தில் தீவிரவாத அமைப்புகள் பகிரங்கமாக செயல்பட்டு வருவதை உறுதி செய்துள்ளது. கேரளா, கர்நாடகம், தமிழகம் ஆகிய 3 மாநிலங்களில் தீவிரவாத செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

ஓட்டு வங்கி அரசியல் நடத்தும் திராவிட கட்சிகளின் தவறான போக்கினால் தமிழகம் பாலைவனமாக மாறி வருகிறது. மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு குறைந்த பிரிமியத்தில் பயிர் காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரத்தட்டுப்பாட்டை மத்திய அரசு முழுவதுமாக நீக்கியுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் போர்வையில் தீவிரவாத அமைப்பினர், நக்சலைட்டுகள், தனி தமிழ்நாடு அமைப்பினர், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு எதிரானவர்கள் கலந்து கொண்டனர்.அரசியலில் தீய சக்திகளாக இருப்பவர்களை சிறையில் தள்ளவேண்டும். பிரதமர் மோடியால் மட்டுமே இந்தியாவை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் தங்க.ராஜைய்யன், மாநில துணைத்தலைவர் ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.