அண்ணா நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
அண்ணா நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
சசிகலா வருவதற்கு முன்பு ஏற்கனவே தி.மு.க சார்பில் வைக்கப்பட்டிருந்த மலர் வளையம், மலர்கள் அகற்றப்பட்டு நினைவிடம் புதுமலர்களால் அலங்கரிக்கப்பட்டது.காலை 10 மணியளவில் சசிகலா அண்ணா நினைவிடத்துக்கு வந்தார். பின்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவிடத்தை சுற்றி வந்து கூடியிருந்த தொண்டர்களை பார்த்து கைகூப்பி வணங்கி விட்டு சென்றார்.
அங்கிருந்து நேராக மறைந்த முதல்-அமைச் சர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அருகில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தி விட்டு புறப்பட்டு சென்றார்.
இதில் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன், பொன்னையன், கே.ஏ. செங்கோட்டையன், பா.வளர்மதி, தமிழ்மகன் உசேன், பண்ருட்டி ராமச்சந்திரன், தம்பித்துரை, அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன், கே.பி. அன்பழகன், சி.வி. சண்முகம், தங்கமணி, எஸ்.பி வேலுமணி, சரோஜா, கே.சி.வீரமணி, ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட செயலாளர்கள் வெற்றிவேல், விருகை ரவி, பாலகங்கா, தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள் சசிகலா வந்த போது இளைய புரட்சித் தலைவி சின்னம்மா வாழ்க என்று கோஷம் போட்டனர். பலர் சட்டை பாக்கெட்டுகளில் ஜெயலலிதா படத்தையும் சிலர் ஜெயலலிதா மற்றும் சசிகலா இணைந்திருக்கும் படத்தையும், சிலர் சசிகலா படத்தை மட்டும் வைத்திருந்தனர்.பசும்பொன் மக்கள் கழக தலைவர் இசக்கிமுத்து நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.