ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் நடந்த வணிகர் சங்க நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்க வந்த மாநில வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மார்ச் 1ம் தேதி முதல் பெச்சி, கோக் போன்ற குளிர்பான விற்பனை ரத்து செய்யப்படுகிறது. வணிகர்கள் விற்பனை செய்வது நிறுத்தப்படுகிறது. இது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் கருத்து கோரப்படும். மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது.
சென்னை சரவணபவன் ஓட்டல்களில் பார்கிங் வசதி இல்லை என கூறி மாநகராட்சி அதிகாரிகள் அந்த ஓட்டல்களுக்கு சீல் வைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. மேலும் குப்பைகளை நாங்களே தரம் பிரிக்க வேண்டும் என கூறுகின்றனர். இதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
சிறு வணிகர்களின் நலன் காக்க ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். மத்திய அரசு கார்பரேட் நிறுவனங்களை வளர்த்து வருகிறது. இதே நிலை நீடித்தால் ஜிஎஸ்டி உணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்த ஒத்துழைப்பு தர பரிசீலிக்க வேண்டி வரும் என வணிகர் சங்க பேரவை எச்சரிக்கிறது. வருகிற 7ம் தேதி முதல் மும்பையில் நடைபெறவுள்ள அகில இந்திய வணிகர் சம்மேளன கூட்டத்தில் அனைத்து பிரச்சனைகளும் முன்வைக்கப்படும்.
கிருஷ்ணகிரி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரெயில் பாதை வசதியை உடனடியாக செய்து தர வேண்டும். கிருஷ்ணகிரி திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டம். ரியல் எஸ்டேட் பிரச்சனையில் அரசு தெளிவான முடிவு எடுக்க வேண்டும்.
மேலும் டோல்கேட் கட்டணத்தை வரன்முறைப்படுத்த வேண்டும். வருகிற மே மாதம் 5ம் தேதி விழுப்புரத்தில் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதில் அனைத்து பிரச்சனைகளும் முன் நிறுத்தி தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின் போது, மாவட்ட தலைவர் கேசவன், செயலாளர் ஜேம்ஸ், பொருளாளர் தங்கராஜ் உள்ளிட்ட மாநில, மாவட்ட அனைத்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் இருந்தனர்.