சிரியாவில் துருக்கி போர் விமானங்களின் குண்டுவீச்சு தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் ஐ.எஸ். இயக்கத்தினர் 51 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டுப்போரால் உருக்குலைந்து போன சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு அவர்களுக்கு எதிராக உள்நாட்டு படைகள், அமெரிக்கா, ரஷியா, துருக்கி படைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனாலும் ஐ.எஸ். இயக்கத்தினரின் கொட்டத்தை அங்கு முழுமையாக ஒழிக்க முடியவில்லை.
இந்தநிலையில் சிரியாவில், துருக்கி எல்லையில் சில குறிப்பிட்ட பகுதிகளில் ஐ.எஸ். இயக்கத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருவதை துருக்கி அரசு அறிந்தது.
இதையடுத்து அங்கு வான்தாக்குதல் நடத்த முடிவு எடுத்தது. அதன்படி அல்பாப், டாதிப், கபாசின், பிஸாகா உள்ளிட்ட இடங்களில் ஐ.எஸ். இலக்குகளை குறிவைத்து துருக்கி போர் விமானங்கள் நேற்றுமுன்தினம் குண்டு வீசத்தொடங்கின.
இந்த தாக்குதல்களில், 24 மணி நேரத்தில் ஐ.எஸ். இயக்கத்தினர் 51 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களது 85 இலக்குகள் நிர்மூலம் ஆக்கப்பட்டன. கட்டிடங்கள் தரை மட்டமாகின. வாகனங்கள் எரிந்து உருக்குலைந்து போயின.இந்த தாக்குதல்கள் அங்குள்ள ஐ.எஸ். இயக்கத்தினருக்கு பலத்த அடியாக அமைந்துள்ளது.