யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் .

768 0

கருவிழியில் கண்ணீரையும் நெஞ்சக்குழியில் கனல் நெருப்பும் விதைக்கும் முள்ளிவாய்க்கால் – மீண்டும் முளைக்கும் !!! யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் .

வீரத்தோடு நெஞ்சுநிமிர்த்தி நின்ற எமது இனம் எதிரிக்கு அடிபணியாது முள்ளிவாய்க்கால் மண்ணிலே வித்தாகிப் போனது. 13 ஆண்டுகள் இதயம் கனக்க நாம் மெல்ல மெல்ல எழுகின்றோம்.

எம் உறவுகள் சிந்திய இரத்தம் எம் கண்களில் வழிய சிவந்த விழிகளோடு நாம் நியாயம் கேட்கப் புறப்படுவோம்.கொத்துக் கொத்தாய் குண்டுகள், செத்து செத்து விழுந்தனர் எம் சொந்தங்கள்.

முள்ளிவாய்க்காலில் இறுதி நொடிவரை தமிழீழ மண்ணுக்குள் விதையாகிப் போன வீரமறவர்களுக்கும், சிங்கள பேரினவாத அரசால் கொல்லப்பட்ட மக்களுக்கும் வணக்கம் செலுத்தும் வகையில் யேர்மன் தலைநகர் பேர்லினில் Neukölln மாவட்ட உள்ளூராட்சிக்கு முன்பாக பல சவால்களுக்கு மத்தியிலும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட திடலில் தமிழின அழிப்பு நினைவு நாள் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு, மாவீரர்களுக்கான கல்லறைக்கும் மக்களுக்கான தூபிக்கும் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு , சுடர்வணக்கம் மற்றும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் தூபி தாயகத்தில் இடித்தழிக்கப்பட்டாலும் மீண்டும் அது உருவாகும் என்பதற்கு அமைவாக இந்த தூபி மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழர்கள் மீது நடைபெற்ற இன அழிப்பிற்கு நீதி கிடைக்கவும் , தமிழ் மக்கள் சுதந்திரமாக தமது தாயகத்தில் , தமிழீழத்தில் வாழவும் தாம் முழுமையான ஆதரவை தெரிவிப்பதாக உறுதியளித்து பலஸ்தீன , குர்திஸ்தான் மற்றும் வெஸ்ட் சகாறா , சர்வதேச இளையோர் பிரதிநிதிகள் , தமிழ் நாட்டு எழுத்தாளர் , என பல பிரதிநிதிகள் சிறப்புரை ஆற்றினார்கள். தொடர்ந்து முள்ளிவாய்க்கால் வலியை எடுத்துரைக்கும் கவிதைகள் , பாடல்கள
இடம்பெற்றது.

தமிழ் பெண்கள் அமைப்பினரால் “முள்ளிவாய்க்கால் முற்றம் ” சிறுவர்களின் கையெழுத்து ஆக்கத்தை கொண்ட இதழ் இவ்வருடமும் வெளியிடப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத வடு . அதை எமது அடுத்த தலைமுறைக்கும் மறவாமல் கடத்துவது எமது தலையாய கடமை. அந்த வகையில் தான் தமிழ் பெண்கள் அமைப்பினரால் இவ் முயற்சி கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றவர்கள் முன் பிள்ளைகள் மடிய, பிள்ளைகள் கண்முன் பெற்றவர் மடிய,உற்ற சொந்தங்கள் உதிரத்தில் நனைய, உயிர் கொண்ட மனிதம் அய்யோ எனக் கதற, உண்ணுங்கள் குண்டுச் சிதறல்களை ,உடுத்துங்கள் உங்கள் குருதியையே ,எண்ணுங்கள் உங்கள் இறுதி நாட்களை ,எனச் சிரித்ததே இப்பாழ்புவி அன்று.
“ஓர் இனத்தின் தேசத்தை, வீரஇனத்தின் இருப்பை அழித்தொழித்துவிட்டு மாபெரும் இனவழிப்பை புரிந்து விட்டு சர்வதேசங்களை நோக்கி மமதையோடு ஆட்சிபுரியும் சிங்கள இனவாத அரசு அதன் இனவழிப்புப் போரிற்கு பதில் கூறும் தருணம் வந்துள்ளது. புதைந்து போனவை எம் உயிர்கள் மட்டுமே. போரில் சென்றவை எம் உடைமை மட்டுமே. சிதைந்து போனவை எம் உடல்கள் மட்டுமே. ஆனால் தமிழீழ கனவை யாராலும் அழித்துவிட முடியாது, எமது அடுத்த தலைமுறை அதற்காக தொடர்ந்தும் போராடும் எனவும் அத்தோடு இன்றைய அரசியல் நிலை சார்ந்தும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பேர்லின் மாநிலப்பொறுப்பாளர் திரு குமணன் அவர்கள் தனது உரையில் வலியுறுத்தினார்.

தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் முகமாக கண்காட்சியும் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஒழுங்குசெய்யப்பட்டு, துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.சம நேரத்தில் இலங்கை தொடர்பாக செயற்படும் பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையால் அறிக்கையும் அனுப்பி வைக்கப்பட்டது.

இறுதியில் எமது மக்களின் வலியையும் வாழ்வையும் எடுத்துரைக்கும் வரலாற்று முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் வரை ஓயாமல் போராடுவோம் எனும் உறுதிமொழி ஏற்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எனும் பாடலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.

மே 18இன் தமிழ் இன அழிப்பு நாளில் நாம் பேரெழுச்சி கொள்வோம். எமது பலத்தினையும் எமது வலிகளையும் ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த அரசுகளுக்கு உணரவைப்போம். எமது கைகளில் நாம் ஏந்தப்போகும் எம் உறவுகளின் இழப்புகளின் ஒளிப்படங்கள் மீண்டும் இந்த அரசுகளைக் கண்விழிக்கச் செய்யட்டும்.