ஊட்டியில் மலர் கண்காட்சி- மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

168 0

நாளை மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதல்-அமைச்சர் நாளை மறுநாள்(21ந்தேதி) ஊட்டியில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் கலந்து கொள்கிறார்.கோடை காலத்தில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாகவும், அவர்களை மகிழ்விக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் தோட்டக்கலைத்துறை சார்பில் கோடைவிழாவையொட்டி காய்கறி, மலர், ரோஜா, பழ மற்றும் வாசனை திரவிய கண்காட்சி நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு கண்காட்சி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ரோஜா, வாசனை திரவிய கண்காட்சி நடந்தது.

இந்த கண்காட்சிகளில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் மலர் கண்காட்சி நாளை தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை 5 நாட்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடக்கிறது.

கண்காட்சியையொட்டி பூங்கா முழுவதும் பொலிவு படுத்தப்பட்டுள்ளது. 5 லட்சம் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

35 ஆயிரம் மலர் தொட்டிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்கள், வேளாண் பல்கலைக்கழக முகப்பு தோற்றம், பழங்குடியினர் சிலைகள், கார்ட்டூன் வடிவங்கள் மற்றும் அலங்கார வளைவு என பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூங்காவில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் மலர் கண்காட்சி நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

இதில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உள்பட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். வேளாண்துறை செயலாளர் சமயமூர்த்தி, தோட்டக்கலை மலை பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தா தேவி, நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

மலர் கண்காட்சியில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் கோவையில் இருந்து கோத்தகிரி வழியாக ஊட்டிக்கு வருகிறார். நாளை மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதல்-அமைச்சர் நாளை மறுநாள்(21ந்தேதி) ஊட்டியில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் கலந்து கொள்கிறார். முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு ஊட்டியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.