தமிழை சிதைப்பதற்கான முயற்சியில் இறங்க வேண்டாம்- ஆளுநருக்கு, தமிழக காங்கிரஸ் வலியுறுத்தல்

203 0

ப.சிதம்பரத்திற்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் வீட்டிலும், அலுவலகத்திலும் சி.பி.ஐ. சோதனையிடுவது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை.

பொது வாழ்வில் ப.சிதம்பரத்தை போன்று நேர்மையும், நாணயமும் மிக்க அரசியல்வாதிகளை தேடி கண்டுபிடிப்பது சிரமம். பொருளாதார சிந்தனைகள் அவரிடம் இருந்து வந்தவைதான்.
மன்மோகன் சிங்கும், அவரும் சேர்ந்துதான் இந்தியாவின் வறுமையை ஒழிப்பதில் மிகப்பெரிய பங்கு வகித்தார்கள். கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத்திட்டம் என்பது அவரது காலத்தில் கொண்டுவரப்பட்டது.
அவரது புகழை, பெருமையை குலைக்க வேண்டும் என்பதற்காக மோடி அரசு கீழ்த்தரமான வேலைகளை செய்கிறார்கள். எத்தனை முறை அவரது வீட்டில் சோதனையிடுவீர்கள். ஒருமுறை சோதனையிடும்போதே அந்த வீட்டில் உள்ள அனைத்து ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு போய்விடுகிறீர்கள்.
அதன்பிறகு புதிதாக ஏதாவது அங்கு வந்துள்ளதா? முதல்முறை சோதனையில் உங்களுக்கு அது எல்லாம் கிடைக்கவில்லையா? 2-வது முறை சோதனை செய்தபோதும் கிடைக்கவில்லையா? சி.பி.ஐ. அதிகாரிகள் வெளியில் வந்து என்ன சோதனை செய்தோம், என்ன கிடைத்துள்ளது என்று சொல்ல வேண்டும்.
பொத்தாம் பொதுவாக ஏராளமான ஆவணங்கள் கிடைத்தன என்று சொல்வது மிகவும் கீழ்த்தரமான செயல்.
மாநிலங்களவை எம்.பி. பதவிக்காக யாருக்கும் இன்னும் கோரிக்கை வைக்கவில்லை. மீண்டும் ப.சிதம்பரத்திற்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டிற்கு வந்து கொஞ்சம் பேச கற்றுக் கொண்டார். அதற்கு முன்பு அவருக்கு உளவு பார்க்கத்தான் தெரியும். தமிழை பிற மாநிலங்களில் 3-வது பாட மொழியாக கொண்டு வருவதற்கு நான் முயற்சி செய்கிறேன் என்று சொல்கிறார்.
நீங்கள் மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல வேண்டாம். இங்கு தமிழ் உயிர் வாழ்வதற்கு எங்களுக்கு வழிவிட்டாலே போதும். இங்கே தமிழை சிதைப்பதற்கான முயற்சிகளில் நீங்கள் இறங்க வேண்டாம் என்பதுதான் எங்களது தாழ்மையான வேண்டுகோள்.
இவ்வாறு அவர் கூறினார்.