பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் 2 செல்போன்கள் திருட்டு

210 0

பிரதமர் பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து, இம்ரான்கான் தனது கட்சியின் சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்.பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான்கான் அரசே காரணம் என கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இதில் இம்ரான்கான் அரசு கவிழந்து, அவர் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனிடையே பிரதமர் பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து, இம்ரான்கான் தனது கட்சியின் சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த 14-ந்தேதி பஞ்சாப் மாகாணம் சியால்கோட் நகரில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இம்ரான்கான் தன்னை கொலை செய்ய சதி நடப்பதாக கூறினார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், “என்னைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. என்னைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும். நான் எனது செல்போனில் ஒரு வீடியோவைப் பதிவு செய்துள்ளேன். அந்த வீடியோவில் நான் அனைவரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளேன். நான் கொல்லப்பட்டால், அந்த வீடியோ பகிரங்கமாக வெளியிடப்படும்” என்று கூறினார்.

இந்த நிலையில் இம்ரான்கான் வீடியோ பதிவு செய்து வைத்திருந்த செல்போன் உள்பட அவரின் 2 செல்போன்கள் திருடுபோனதாக அவரது முன்னாள் உதவியாளர் ஷாபாஸ் கில் தெரிவித்துள்ளார். இம்ரான்கான் சியால்கோட் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு இஸ்லாமாபாத் திரும்புவதற்காக சியால்கோட் விமான நிலையத்துக்கு வந்தபோது அவரின் 2 செல்போன்கள் திருடப்பட்டதாக ஷாபாஸ் கில் கூறினார்.