தனி கட்சி பிரதமர் என என்னை பலர் குறிப்பிடுகிறார்கள். ஆளும் கட்சியா, எதிர்க்கட்சியா என்பதை அறியாதுள்ளேன். அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முதன் முதலில் பாராளுமன்ற கலாசாரம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
முழு பாராளுமன்றமும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. பாராளுமன்றத்தை மக்கள் விமர்சிக்கிறார்கள். பாராளுமன்ற கலாசாரத்தை மாற்றியமைக்காவிடின் எதிர்வரும் வாரம் கூடுவதற்கு பாராளுமன்றம் இருக்காது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்ச சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
< காலி முகத்திடல் போராட்டம் மற்றும் அதனை தொடர்ந்து இடம்பெற்ற அமைதியற்ற தன்மை தொடர்பில் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடலை மேற்கொண்டேன். சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமை செயற்படுவதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்விடயம் தொடர்பில் விசேட அறிவித்தலை விடுக்க வேண்டும்.
பிரதமரின் உரையின் போது எதிர்தரப்பினர் இடையூறு ஏற்படும் வகையில் கூச்சலிட்டதை தொடர்ந்து சபாநாயகர் சபை நடவடிக்கைக்கு இடையூறு விளைவிக்கப்படுமாயின் சபை நடவடிக்கை ஒத்திவைக்கப்படும் என அறிவித்தார். எதிர்தரப்பினரை நோக்கில் பிரதமர் ‘கூச்சலிடும் பலர் என்னிடம் அமைச்சு பதவிகளை கோரினார்கள் ‘என குறிப்பிட்டார்.
பிரதி சபாநாயகர் பதவி தெரிவிற்கான கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பிற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. ரஞ்சித் சியம்பலாபிடியவிற்கு ஆதரவு வழங்குவதாக ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன். அவ்வேளையில் ஏற்பட்ட குழப்ப நிலையை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆற்றிய உரையின் போது விளங்கிக்கொள்ள முடிந்தது.
இரண்டாவது முறையாக இடம்பெற்ற பிரதி சபாநாயகர் தெரிவிற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. கட்சி தலைவர் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பிலான பேச்சுவார்த்தையில் நான் கலந்துக்கொள்ளவில்லை. கலந்துக்கொண்டிருந்தால் வாக்கெடுப்பில்லாமல் ஒருவரது பெயரை பரிந்துரை செய்திருப்பேன். பெண் பிரதிநிதித்துவத்திற்கு இப்பதவியை வழங்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
தனி கட்சியின் பிரதமர் என என்னை குறிப்பிடுகிறார்கள். எதிர்தரப்பினரது கூட்டங்களுக்கும், ஆளும் தரப்பினரது கூட்டங்களுக்கும் என்னால் கலந்துக்கொள்ள முடியாதுள்ளது. எத்தரப்பினரது பக்கம் இருக்க வேண்டும் என்பது தெரியாதுள்ளது. முழு பாராளுமன்றமும் அச்சுறுத்தலை எதிர்க்கொண்டுள்ளது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மரணமடைந்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு எதிராக ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பினை வெளிப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டுள்ளமை சாதாரண விடயமல்ல என்பது தற்போது தெளிவாகியுள்ளது.
அரசியல்வாதிகளின் வீடுகளுக்கும் பாரிய சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும். விருப்பமில்லாத அரசியல்வாதிகள் வீடுகளுக்கு தீ மூட்டும் நிலைமையே காணப்படுகிறது.
காட்டிக் கொடுத்து விட்டதாக பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் சகல விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டிய தேவையும், தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய தேவையும் காணப்படுகிறது.
பாராளுமன்ற கலாச்சாரம் முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும். துரதிஷ்டவசமாக தவறான கலாசாரம் இன்றும் வழக்கில் உள்ளது. மக்கள் பாராளுமன்றத்தை விமர்சிக்கிறார்கள்.பாராளுமன்ற கலாச்சாரத்தை மாற்றியமைக்கும் முகமாக தேசிய சபை ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளேன்.
பாராளுமன்ற கலாச்சாரத்தில் மாற்றம் ஏற்படுத்தாமல் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாது. ஆளும் மற்றும் எதிர்தரப்பினர் முரண்பட்டுக்கொண்டால் பாராளுமன்றம் தேவையில்லை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் தோற்றம் பெறும்.சகல தரப்பினரது விமர்சனங்களுக்கு மத்தியில் பொறுப்பேற்றுள்ளேன்.
ஒருவர் உரையாற்றும் போது பிறிதொருவர் அமைதியாக இருந்து அதனை செவிமெடுக்க வேண்டும். பாராளுமன்ற கலாசாரம் மாற்றியமைக்கப்படாவிடின் இந்நிலைமை தொடர்ந்தால் அடுத்த வாரம் கூடுவதற்கு பாராளுமன்றம் இருக்காது என்றார்.