ராம்குமாரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

467 0

201607131736353607_Ramkumar-placed-under-3-day-police-custody_SECVPFசுவாதி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் கோர்ட் இன்று அனுமதி அளித்தது.

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார். தற்கொலைக்கு முயன்ற அவர் தீவிர சிகிச்சைக்குப்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று கொலையாளியை அடையாளம் காட்டுவதற்கான அடையாள அணிவகுப்பு நடைபெற்றது.

இந்நிலையில், ராம்குமாரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, ராம்குமார் இன்று எழும்பூர் 13-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த புழல் மருத்துவமனை மருத்துவர் நவீன்குமாரும் கோர்ட்டில் ஆஜரானார். அவர் ராம்குமாரின் உடல்நிலை குறித்து நீதிபதியிடம் விளக்கம் அளித்தார்.

அதேசமயம், ராம்குமாரை போலீஸ் காவலுக்கு அனுப்புவதற்கு ஆட்சேபம் தெரிவித்து அவரது வழக்கறிஞர் ராமராஜ் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், ராம்குமார் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கக் கூடாது என கூறியிருந்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, போலீசாரின் வேண்டுகோளை ஏற்று 3 நாட்கள் ராம்குமாரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து ராம்குமாரை பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்துச் சென்றனர்.