ஆயிரமாயிரம் கறுப்பு யூலைகளயும், செம்மணிகளையும், செஞ்சோலைகளையும் ஒன்றாகச் சேர்த்து சிங்கள பௌத்த பேரினவாத பேயாட்சி ஆடிய ஊழிக்கூத்தின் அழியா சாட்சியாக முள்ளிவாய்க்கால் இரத்த சரித்திரத்தின் 13வது ஆண்டை கடக்கும் நிலையில், ஈழத்தமிழர்களை இனவழிப்புச்செய்த ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சிக்கெதிராக சிங்கள மக்களே கிளர்ந்து எழுந்துள்ளனர். 13வது இனவழிப்பு நினைவேந்தல் நாளில் கொடுங்கோலர்களின் ஆட்சி அவர்களது சொந்த மக்களாலேயே அடித்துத் வீழ்த்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறிய காலத்திலிருந்து ஈழத்தமிழர்களை வஞ்சித்து செய்த இனவாத அரசியலின் விளைவே இன்றைய நிலைக்குக் காரணம். ஈழத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கைத்தீவில் என்றுமே அமைதியான வாழ்வும் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியும்; கிட்டாது என்பது நிதர்சனமான உண்மை.
கொன்று பிணமாகவும், உயிருடனும் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட 70.000ற்கு மேற்பட்ட எமது உறவுகளுக்கு கிடைக்கும் நீதியானது எமக்கானதாக மட்டுமன்றி அனைத்துலக மனிதநேயத்தின் மாண்பினை காப்பதாகவும் அமையும். ஏனென்றால், தமிழர் உடல்களுடன் அனைத்துலக மனிதநேயமும் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஆழப்புதைக்கப்பட்டுள்ளது. விடுதலை வேட்கையுடன் மரித்துப்போன மண்ணுறங்கும் மாவீரர்கள் விடுதலையின் பால் கொண்ட பற்றுறுதியே இன்று சிங்களத்தை அல்லோலகல்லோலப் படுத்துகின்றது. தமிழர்களைத் துயிலுரிந்து மானபங்கப்படுத்தியவர்கள், இன்று தங்கள் சொந்த இனத்தாலேயே துயிலுரிந்து அடித்துக் கலைக்கப்படுகிறார்கள்.
இன்று வரை 146,679 பேருக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியாமலே 13 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஒருபக்கம் எமக்கான நீதி தடுத்து தாமதப்படுத்தப்பட்டு வருகையில் மறுபக்கம் வேறு வடிவிலான இனவழிப்பு செயற்பாடுகளும் சிங்கள அரசுகளால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 2009ல் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னரும் வடக்குக் கிழக்கில் 300.000 இராணுவத்தினர் குடிகொண்டுள்ளனர். இராணுவத்தளபதியும் இனவழிப்பாளனுமான சவேந்திர சில்வா எந்தத் தயக்கமும் இல்லாமல் வடக்கில் அமைக்கப்படும் பௌத்த விகாரையைப் பார்வையிட வந்து செல்கிறான். சிங்கள மக்களை மூளைச்சலவை செய்து பௌத்த சிந்தனைவாதத்திற்குள்ளும் மகாவம்ச மாயைக்குள்ளும்; வைத்துக்கொண்டு தமிழரையும் முசுலீம்களையும் நசுக்கி இனவாத அரசியல் மேற்கொண்டு வருகிறது சிங்களம். இன்றைய எதிர்ப்புகள் ராஜபக்சக்களோடு முடங்கிப் போகுமானால், எதிர்வரும் காலங்களில் மீண்டும் ராஜபக்சக்களோ அவர்களின் ஆதரவாளர்களோ ஆட்சிபீடமேறுவதற்கான சாத்தியமுண்டு. சிங்கள பௌத்த பேரினவாத கட்டமைப்பும் மகாவம்ச மனப்பாங்கும் மாறாமல் சிங்கள தேசத்தில் நீண்டகால மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.
இலங்கை 70 ஆண்டுகளுக்கும் மேலாக அதன் மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகள் 2022 மார்ச் மாதத்தில் மட்டும் 30 வீதத்தால் அதிகரித்துள்ளன. சுற்றுலாப் பயணிகளைச் சார்ந்துள்ள நாட்டின் வாழ்க்கைச் செலவை நாட்டு மக்களால் தாங்க முடியாத அளவிற்கு மிக அகோரமாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக சனாதிபதி இராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி நாடு பூராவும் ஆயிரக்கணக்கானோர் அண்மையில் பாரிய ஆர்ப்பாட்டங்களில் வீதிகளில் இறங்கினர். 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கைத் தீவு உணவு, எரிபொருள், மருந்து மற்றும் பிற அத்தியாவசிய அடிப்படைப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை அனுபவித்து வருகிறது. இது அரசிற்கு ஒரு பாரிய நெருக்கடியாகும், 1948ல் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கைத் தீவில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியாகும். இப்படியான பெரு நிதி நெருக்கடி பல காரணிகளால் ஏற்படுகிறது, தமிழ் மக்களுடனான சிங்களப் பேரினவாதிகளின் இன முரண்பாட்டு அரசியல் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.
ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை தமிழின அழிப்பிற்கு காலதாமதம் இன்றி உடனடியான அனைத்துலக சுயாதீன விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகள் சர்வேதச நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற விடா முனைப்புடன் செயற்பட்டு சிங்களத்திற்கும் சர்வதேசத்திற்கும் அழுத்தங்களை தொடர்ந்தும் கொடுக்கவேண்டும். தமிழர்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட காணிகள் அனைத்தும் திருப்பி அளிக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் சிங்களக் குடியேற்றங்கள், நில அபகரிப்புகளும் நிறுத்தப்பட வேண்டும். தமிழர்களின் கலை, கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடுகளைச் சீரழிக்கும் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இலங்கைத் தீவின் தேசிய இனமாகிய தமிழர்கள் தமது தலைவிதியைத் தாமே நிர்ணயிக்கும் வகையில் தாயகத்திலும், புலத்திலும் வாழும் ஈழத்தமிழர் மத்தியில் ஐநாவின் கண்காணிப்பில் சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும். தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வழங்காமல் இலங்கைத் தீவில் ஒரு பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்க முடியாது என்பதே நாம் வரலாற்று ரீதியாகக் கண்ட உண்மை.
முள்ளிவாய்கால் வரை கொண்டுவந்து விடப்பட்ட ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை அந்தப்புள்ளியில் இருந்து முன்னகர்த்திச் சென்றிருக்க வேண்டிய தமிழ் அரசியல் தலைமைகள், இன்றுவரை இனத்திற்கான அரசியலை முன்னெடுக்காது, அடுத்தவர்கள் நலன்சார்ந்தும், தம்மை வளப்படுத்தும் சுயலாப அரசியலையுமே மேற்கொண்டு வருகின்றனர். தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை ஆகிய கோட்பாடுகளை முன்னிறுத்தி எமது மக்களுக்கான நிரந்தர அரசியற் தீர்வை பெற்றுத்தருவதற்காகவே மக்கள் இவர்களுக்கு வாக்களித்தனர். நாம் காண்கின்ற ஒருசில அரசியல்வாதிகள் மட்டுமே ஓரளவிற்கு எமது உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கின்றனர். இது ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டிய காலம். ஓன்றுக்கும் உதவாத உக்கிப்போன சுயநல அரசியல் கலாச்சாhத்தை நடாத்தும் செயற்திறன் அற்ற தமிழ் அரசியல்வாதிகளை இனியும் வைத்துக்கொண்டு எமது விடியலைத் தேட முடியாது. இவர்கள் அனைவரையும் அகற்றி புதிய தலைமைகளை நாமும் தேடவேண்டிய காலம் வந்துவிட்டது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை