இரு பிரதான தவறுகள் காரணமாகவே மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராடுகிறார்கள். ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிலையியல் கட்டளையை ஒதுக்கி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் யோசனைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளோம்.
மக்களின் அபிலாஷைகளுக்கு அமைய தீர்மானம் எடுத்தோம். பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை வரவேற்கத்தக்கதாக உள்ளதால் அவரது செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் ஜீவன் தொண்டமான் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றில் இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது நடப்பு நிலைவரங்கள் குறித்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை வரவேற்கத்தக்கது.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விசேட அவதானம் செலுத்த வேண்டும்.பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்கததினர் போராட்டங்களில் ஈடுப்பட்டுள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுப்படுவதற்கு நினைத்தாலும்,போராட்டத்தில் ஈடுப்படாத நிலையிலும் ஒருதரப்பினர் உள்ளனர்.
ஒரு நாள் கூலியை விட்டு அரசாங்கத்திற்கு போராட்டத்தில் ஈடுப்படும் நிலைமையில் ஒரு தரப்பினர் இல்லை வாழ்க்கை செலவும் அவர்களுக்கு சாதகமாக இல்லை.
பிரதமரின் உரையில் பல்வேறு விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.இனிப்பான பொய்யை காட்டிலும்,கசப்பான உண்மை மேல் .
இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி பல்வேறு தரப்பினருக்கு அழைப்பு விடுத்திருந்தார்
தற்போதைய நிலைமையில் அரசியல் ,கட்சி பேதங்களை துறந்து ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.நாட்டில் சமையல் எரிவாயு இல்லை,எரிபொருள் இல்லை,டொலர் இல்லை அத்துடன் இவையனைத்தை காட்டிலும் மோசமான விடயம் இந்த கேள்விகளுக்கு பதிலில்லை.
இவ்வாறான பின்னணியில் நாட்டுக்கு தலைமைத்துவம் அவசியம்.
நாடு பொருளாதார ரீதியில் பாரிய சவால்களை எதிர்க்கொண்டுள்ளது..அரசியல் நெருக்கடிக்கு தீர்வு கண்டால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீரவு காண முடியும்.
சவாலான பின்னணியில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளார்.அவருக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம்.
அரசாங்கத்தின் தவறான தீர்மானத்தின் காரணமாக மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கடும் போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்.
வரி குறைப்பு,சேதன பசளை திட்டம் அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களாகும்.சேதன பசளை திட்டம் கட்டம் கட்டமாக செயற்படுத்தப்படும் என்றே குறிப்பிடப்பட்டது.
ஒரு இரவில் சேதன பசளை திட்டம் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கவில்லை.
ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிலையியல் கட்டளையை ஒதுக்கி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தோம்.
மக்களின் குரலாக செயற்படும் காரணத்தினால் மக்களின்சார்பில் இருந்து தீர்வு எடுக்க வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு என்றார்.