பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பின்னணியில் பாராளுமன்ற கூட்டத்தொடர் சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் இன்று (17) காலை இடம்பெறவுள்ளது.
சபை நடவடிக்கையில் முதலாவதாக பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது.
பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் பிரதிநிதித்துவத்தை நியமிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சகல கட்சிகளிடமும் வலியுறுத்தியுள்ளார்.
பொதுஜன பெரமுன பிரதி சபாநாயகர் பதவிக்கு மும்மொழியாவிடின் ஐக்கிய மக்கள் சார்பில் மும்மொழியப்பட்டுள்ள ரோஹினி கவிரத்ன பிரதிசபாநாயகராக ஏகமனதாக தெரிவு செய்யப்படுவார்.
வெற்றியமாகியுள்ள பிரதிசபா நாயக்கர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவின் பெயரை பரிந்துரை செய்வதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதேபோல் பிரதி சபாநாயகர் பதவிக்கு தனது கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவின் பெயரை மும்மொழிய தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்ததை தொடர்ந்து ரஞ்சித் சியம்பலாபிடிய கடந்த மாதம் 30ஆம் திகதி பிரதிசபாநாயகர் பதவியில் இருந்து விலகினார்.
கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் பிரதிசபாநாயகர் தெரிவிற்காக ரஞ்சித் சியம்பலாபிடியவை மும்மொழிந்தனர்.
சுயாதீன குழுக்கவின் மும்மொழிவை தாம் முழுமையாக ஆதரவிப்பதாக பொதுஜன பெரமுனவின் தவிசாளர் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் இம்தியாஸ் பாகீர் மாக்கரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதை தொடர்ந்து பிரதி சபாநாயகர் தெரிவிற்காக இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது.
பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் 148 வாக்குகளை பெற்று ரஞ்சித் சியம்பலாபிடிய இரண்டாவது முறையாகவும் பிரதிசபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.
புரதிசபாநாயகர் தெரிவிற்கு அரசியல் மற்றும் சமூக மட்டத்தில் கடுமையான எதிர்ப்புக்கள் தோற்றம் பெற்றதை தொடர்ந்து ரஞ்சித் சியம்பலாபிடிய இரண்டாவது முறையாகவும் பிரதிசபாநாயகர் பதவியில் இருந்து விலகினார்.
பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் பிரதிநித்துவத்தை நியமிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளிடமும் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.