மைனா கோ கம, கோட்டா கோ கம மீதான தாக்குதல்கள்-மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட இருவர் கைது

222 0

மைனா கோ கம, கோட்டா கோ கம மீதான தாக்குதல்கள் தொடர்பில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா மற்றும் நகர சபை ஊழியர் ஒருவரும் குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் மைனா கோ கம, கோட்டா கோ கம பகுதியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள போதிலும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் ஒருவர் மாத்திரமே கைது செய்யப்பட்டிருந்ததாக நிலையில், மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா மற்றும் நகர சபை ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக  முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிசாந்த, மேல் மாகாண  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்டோரை 22 பேரை உடன் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்ய சட்ட மா அதிபர் சி.ஐ.டி.க்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், காலி முகத்திடல் போராட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (17) 39 நாளாகவும் தொடர்ந்து இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.