கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில் இதுவரை மீட்கப்பட்டுள்ள 4 பேரில் இருவர் உயிரிழந்தனர். 2 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான் குளத்தில் தனியார் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது.
இந்த குவாரியில் கடந்த 14ம் தேதி இரவு 400 அடி ஆழத்தில் கற்களை ஏற்றிக்கொண்டிருந்தபோது ராட்சத பாறை உருண்டு விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த 6 தொழிலாளர்கள் பாறைகளின் இடிபாடுகளில் சிக்கினர்.
மேலும் அங்கு நின்ற லாரி மற்றும் பொக்லைன் எந்திரங்களும் இடிபாடுகளில் சிக்கியது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று கயிறு மூலம் குவாரிக்குள் இயங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் (வயது 40), நாட்டார்குளத்தை சேர்ந்த விஜய் (27) ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் சுமார் 17 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இளையநயினார் குளத்தை சேர்ந்த செல்வம் என்பவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே பாறை சரிவில் சிக்கிய காக்கைகுளத்தை சேர்ந்த செல்வகுமார் (30), தச்சநல்லூர் ஊருடையான்குளத்தை சேர்ந்த ராஜேந்திரன், ஆயன்குளத்தை சேர்ந்த மற்றொரு முருகன் (23) ஆகிய 3 பேரை மீட்கும் பணிகள் நேற்று நடைபெற்றன. அவர்களை மீட்க அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 30 பேர் வரவழைக்கப்பட்டனர்.
நேற்று காலை மீட்பு பணிகள் நடைபெற்ற போதே 2 முறை பாறைகள் சரிந்து விழுந்தது. எனினும் 47 மணி நேர மீட்பு பணிக்கு பின்னர் நேற்றிரவு பாறை இடிபாடுகளில் சிக்கிய 4 வது நபர் சடலமாக மீட்கப்பட்டார்.
ராஜேந்திரன், செல்வகுமார், முருகன் ஆகிய மூவரில் யார் அவர் என அடையாளம் தெரியவில்லை. இன்னும் இருவர் மீட்கப்பட உள்ள நிலையில், பாறைகளில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால் அவை இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்பு பணிகள் நேற்றிரவு நிறுத்தப்பட்டது.
மண்ணியல் நிபுணர்கள் ஆய்வு செய்து, அறிவுறுத்திய பிறகே மீண்டும் மீட்பு பணிகள் தொடங்கும் என்று காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே கல்குவாரி விபத்து தொடர்பாக குவாரி உரிமையாளர் சங்கர நாராயணன், ஒப்பந்த தாரர்கள் செல்வராஜ், குமார் மற்றும் மேலாளர் ஜெபஸ்டின் ஆகிய 4 பேர் மீதும் 3 பிரிவுகளில் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் சங்கர நாராயணன், ஜெபஸ்டின் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.