சவால்களை ஏற்க தாங்கள் முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கது – சம்பிக்க பிரதமருக்கு கடிதம்

299 0

பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடியினை நாடு எதிர்க்கொண்டுள்ள பின்னணியில் பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் பல்வேறு காரணிகளை குறிப்பிட்டுக்கொண்டு பொறுப்பில் இருந்து விலகிய போது சவால்களை ஏற்க தாங்கள் முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கது.

இடைக்கால அரசாங்கம் தொடர்பிலும்,பொருளாதார மீட்சி தொடர்பிலும் தாங்கள் விரைவாக தெளிவுப்படுத்த வேண்டும், அதனை தொடர்ந்தே இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதா, இல்லையா என்ற தீர்மானம் எட்டப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ராஜபக்ஷர்களின் தவறான பொருளாதார கொள்கை நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலைமையினை அடைவதற்கு பிரதான காரணியாக அமைந்துள்ளது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்திற்கும்,முழு அரசியல் கட்டமைப்பிற்கும் எதிராகவும் போராட்டங்களில் ஈடுப்படுகிறார்கள்.

ராஜபக்ஷர்கள் பதவிகளில் இருந்து விலகியமை,ஜனநாயக ரீதியில் அரசியலமைப்பு திருத்தத்திற்கு அவதானம் செலுத்தல்,ஊழல் ஒழிப்பு,இனம் மற்றும் மத பேதமற்ற வகையில் மக்கள் ஒன்றினைந்துள்ளமை போராட்டத்தில் ஆரம்ப வெற்றியாகும்.

அரசியல் நெருக்கடி தீவிரமைந்ததன் பின்னணியில் பிரதமர் பதவியை ஏற்றுள்ளீர்கள்.கோட்டா கோ கம போராட்;டத்தில் ஈடுப்படுபவர்கள் அரசியல் கட்டமைப்பு தொடர்பில் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு நீங்கள் (பிரதமர்) செலுத்தியுள்ள அவதானம்; தெளிவாக விளங்குகிறது.

தற்போது நினைத்தும் கூட பார்க்க முடியாத பொதுத்தேர்தல் மற்றும் மக்கள் வாக்கெடுப்பு தொடர்பில் ஒரு சில தலைவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள வேண்டுமாயின் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தினோம்.

இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க வேண்டியது சகல அரசியல் கட்சிகளினதும் கடமையாகும்
காலி முகத்திடல் அமைதி வழி போராட்டகாரர்கள் மீது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் கடந்த திங்கட்கிழமை (2022.05.09) மேற்கொண்ட மிலேட்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள்
இத்தாக்குதலுடன் தொடர்புடைய பொதுஜன பெரமுனவின் அரசியல் ஆதரவாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை என்ன?

அதனை தொடர்ந்து அரசியல்வாதிகளின் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை என்ன?

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகும் தினம் தொடர்பில் உங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளாரா,?அது தொடர்பில் முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன?

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன்னிலைப்படுத்த தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளில் ஏதேனும் குறைப்பாடுகள் காணப்படுவதாக கருதினால் புதிதாக சுயாதீன விசாரணைகளை முன்னெடுத்து பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தல்,சுயாதீன நீதிமன்றம்,பொலிஸ்,அரச சேவை, தேர்தல்கள் ஆணைக்குழு, கணக்காய்வு ஆணைக்குழு ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்திற்கான உடன்பாட்டிற்கு வந்துள்ள திருத்த வரைபு என்ன?

அரசியல் கட்சிகளின் உள்ளக ஜனநாயகம்,நிதி ஒழுங்கு,சமூகத்திற்கு பொறுப்புக்கூறல்,தேர்தல் சட்டம் திருத்தம் தொடர்பில் முன்னெடுப்பட வேண்டிய துரிதகர தீர்மானங்கள் யாவை இந்த கேள்விகளுக்கு பகிரங்க பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.