காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் கைது செய்யப்படுவதற்கு பதிலாக , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களே கைது செய்யப்படுகின்றனர்.
இது தொடர்பில் பக்க சார்பற்ற சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் திங்கட்கிழமை(16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் இது வரையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை. அதனையே முழு உலகமும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.
இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதற்கு இடமளித்து பாதுகாப்பு செயலாளர் பார்த்துக் கொண்டிருந்தார். தற்போது அவர் எவ்வித தவறும் இழைக்காதவரைப் போன்று பேசிக் கொண்டிருக்கிறார்.
நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் கைது செய்யப்படாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
வன்முறைகளின் போது சேதமாக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களது வீடுகள் காணப்பட்ட பொலிஸ் பிரிவுகளில் கடமையாற்றிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் நியமனம் முற்று முழுதான அரசியல் நியமனமாகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான சந்திப்பின் போது பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறு வலியுறுத்திய போதே , அவர் இந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
பொலிஸ் ஆணைக்குழு இன்மையால் பொலிஸ் துறை முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளமை இதன் மூலம் தெளிவாகிறது. இது சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவின் தேவையையும் நிறைவேற்றியுள்ளது
இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களாவர்.
அவ்வாறிருக்கையில் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீதான தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸார் பொது மக்களிடம் தகவல் கோரியுள்ளமை நகைப்பிற்குரியது.
வன்முறைகளில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கு பதிலாக , ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பொது மக்களே கைது செய்யப்படுகின்றனர்.
எனவே காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீதான தாக்குதல்கள் தொடர்பில் பக்க சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அவை மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தலையீடு இன்று சுயாதீனமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.&