கோதா பதவியில் தொடருவாரா? அல்லது ரணில் ஜனாதிபதியாவாரா?

267 0

மாறிவரும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ராணுவ ஆட்சியை கோதா ஏற்படுத்துவாரா? நெருக்கடியை சமாளிக்க முடியாது சில மாதங்களில் ஜனாதிபதி பதவியைத் துறந்து நாட்டை விட்டு கோதா ஓடுவாரா? திடுதிப்பென பிரதமராக வந்தது போன்று ஜனாதிபதி ஆகும் வாய்ப்பும் ரணிலுக்குக் கிடைக்குமா? அப்படியென்றால், கோதா கம போராட்டம் எவ்வாறு மாற்றம் எடுக்கும்? முள்ளிவாய்க்கால் வாரத்தில் இக்கேள்விகள் மனதைத் துளைப்பதை தடுக்க முடியவில்லை. 

மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது என்பது எல்லாவற்றுக்கும் இணக்கமான ஒரு பொதுவாக்கு. இலங்கை அரசியலில் இப்போது அந்த மாற்றம் நிகழ்கிறது. கடந்த வாரத்து இந்தப் பத்தியின் இறுதியில். அடுத்து வரும் நாட்களும் வாரங்களும் எல்லாவற்றையும் வெளிப்படுத்தலாம் என்று சுட்டியவாறு. எதிர்பார்த்த – எதிர்பாராத பல மாற்றங்கள் இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது ஒரு தொடர்கதையாகப் போகிறது.

2019 இறுதியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 69 லட்சம் சிங்கள மக்களின் வாக்குகளால் மகுடம் சூட்டப்பட்டவர் கோதபாய. அவரது பதவிக்காலத்தின் அரைப்பகுதிக்குள்ளேயே அதே மக்கள் அவரை வீட்டுக்குப் போ என்று கோசமிடுவார்கள் என யாரும் கற்பனை பண்ணியிருக்க மாட்டார்கள்.

2020 நடுப்பகுதியில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்து பிரதமர் கதிரையில் ஏறிய மகிந்த, ஒரு வருடமும் ஒன்பது மாதங்களும் மட்டுமே பதவியில் இருந்த நிலையில், பதவி துறந்து ராணுவப் பாதுகாப்புடன் உலங்குவானூர்தியில் தப்பியோட நேருமென எவரும் கனவு கூடக் கண்டிருக்க மாட்டார்கள்.

ராஜபக்ச குடும்பம் என பெருவிருட்சமாக இருந்த ஆட்சியின் வேர்கள் அறுக்கப்பட்டு, இப்போது இழுபட்ட ஒற்றை வேரில் நிற்பவர் ராணுவ வழிவந்த கோதபாய மட்டுமே. எரிபொருள் தட்டுப்பாடு, உரத் தட்டுப்பாடு, உணவுப் பொருட்கள் விலையேற்றம், பொருளாதாரப் பாதிப்பு, பணவீக்கம் என்பவற்றுக்கு அப்பால், ஒரு குடும்பமும் அதைச் சுற்றி இருந்தவர்களும் மேற்கொண்ட ஊழல், மோசடி, திருட்டு, கொள்ளை என்பவற்றால் பாதிப்புற்ற மக்கள் தன்னெழுச்சி கொண்டதால் நாடு முடக்க நிலை கண்டது.

கோதா வீட்டுக்குப் போ, மகிந்த வீட்டுக்குப் போ என்ற பேரெழுச்சியின் பயனாக திடுதிப்பென எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கான மைய இடமாக காலிமுகத் திடலும் (கோதா கம), அலரி மாளிகை முன்றலும் (மைனா கம) மாறின. வன்செயல்கள் எதற்கும் இடங்கொடாத வகையில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தை, காலத்தை இழுத்தடிப்பதால் களைத்துவிடச் செய்யலாமென ராஜபக்சக்கள் எண்ணினர். அதற்கேற்ப காய்களையும் நகர்த்தினர்.

இதற்கு ஏதுவாக தங்களுக்கு இயைவான ஊடகங்களில் சில செய்திகளை இவர்கள் பரவ விட்டனர். மகிந்தவைப் பதவியில் இருந்து கோதா நீக்குவார், கோதா பதவி விலக மாட்டார், விரும்பினால் கோதா அவரை நீக்கலாம் என்பவற்றோடு – எனது அண்ணனை நான் வெளியேற்ற மாட்டேன் என கோதா அறிவித்தது போலவும் செய்திகள் வந்தன.

இவை எதனையும் செவி சாய்க்காது, பொய்யுக்கும் புரட்டுக்கும் எல்லை உண்டு என்பதை உணர வைக்கும் வகையில், ராஜபக்சர்களுக்கு எதிரான போராட்டம் திருப்புமுனைக்கு வந்தது. கோதா வீட்டுக்குப் போ என்று ஆரம்பித்த போராட்டத்தை லாவகமாக தமது அண்ணன் மகிந்த பக்கம் திருப்பி விட்டார் கோதபாய. கோதாவின் கோரிக்கையை (இதனை உத்தரவு என்றுதான் சொல்ல வேண்டும்) ஏற்று மகிந்த பிரதமர் பதவியை துறக்கும் நிலை உருவானது.

இதனால் ஏற்படப்போகும் அரசியல் நெருக்கடிகளையும், உருவாகக்கூடிய களேபரத்தையும் எதிர்பார்த்து மே மாதம் 7ம் திகதி மீண்டும் அவசரகால நிலையை கோதபாய அறிவித்து, பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தை வர்த்தமானி ஊடாக பிரகடனம் செய்தார். பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டளைச் சட்டம், ஆட்சித் தரப்பினரை பாதுகாக்க பிரகடனமாகியது விந்தையானது.

மே மாதம் 9ம் திகதியன்று தமது பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு முதல் இரவு பல பேருந்துகளில் ஆயிரக்கணக்கான அவரின் ஆதரவாளர்கள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கான பணி என்னவென தெரிவிக்கப்பட்டது.

ஒரு மாதத்துக்கும் மேலாக மிகமிக அவதானமாக – நாடி வந்த நெருக்கடிகளையும் வன்செயல் புகாதவாறு போராட்டத்தை மேற்கொண்டவர்கள் மீது மகிந்தவின் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். காவலுக்கு நின்ற பொலிசார் தாக்குதல்களை தடுக்காது வேடிக்கை பார்த்து நின்றனர். இதுவும் பிரதமர் அலுவலகத்தின் உத்தரவுதான்.

இதன் தொடர் நிகழ்வுகள் அடுத்த நாற்பத்தெட்டு மணித்தியாலங்கள் நாட்டை அல்லோலகல்லோலப்படுத்தியது. தங்கள் மீது ஏவப்பட்ட அரச வன்முறையை தடுப்பதற்கு போராட்டக்காரர்கள் தயாராக இல்லாத நிலையிலும் முடிந்தவரை தடுப்பு முயற்சிகளை மேற்கொண்டார்கள். வெகுஜன எழுச்சியால் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட ஒன்பது உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் வீடுகள், அவர்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் தீமூட்டி எரிக்கப்பட்டன. பல கட்டிடங்கள்  சேதமாக்கப்பட்டன.

தங்காலையிலுள்ள ராஜபக்சக்களின் பூர்வீக இல்லம் எரியூட்டப்பட்டது. இவர்களது தந்தை டி.ஏ.ராஜபக்சவின் சிலை தகர்க்கப்பட்டது. ஊரடங்குச் சட்டத்தால் எதனையும் தடுக்க முடியவில்லை.

பதவி துறந்து ஓடித் தப்புவதற்கு முன்னர், தமது தம்பியான கோதபாயவுக்கு மகிந்த வழங்கிச் சென்ற நினைவுப் பரிசு திட்டமிட்ட வன்செயல். இதனை கோதபாய எதிர்பார்த்திருக்கவில்லையென அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வன்செயலுக்குத் தூபமிட்டு அதனை ஆரம்பித்து வைத்தவர் தமது அண்ணரான மகிந்த என்பதை நன்கு தெரிந்த கொண்ட கோதா, 11ம் திகதி இரவு நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் முக்கியமான ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார் – இந்த நிகழ்வுகளுக்கு வழிவகுத்த முதலாவது சம்பவத்தை பாரபட்சமின்றி தான் கண்டிப்பதாகக் குறிப்பிட்டதோடு, இது தொடர்பில் பூரண விசாரணைக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணை எப்போது முடிவடையும், குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பவற்றுக்கு அப்பால், இந்த வன்செயல்களுக்கான திட்டம் அலரி மாளிகையில் மகிந்த தலைமையில் தீட்டப்பட்டது என்பதை கோதா பகிரங்கமாகக் குறிப்பிட்டுள்ளதை இங்கு கவனிக்கலாம்.

நான்கு தடவைகள் பிரதமராக (ஒரு தடவைகூட முழுமையான பதவிக்காலத்தில் இருக்கவில்லை) இருந்த மகிந்த, கம்பராமாயணத்தில் கவிச்சக்கரவர்த்தி குறிப்பிட்டதுபோல, ‘யாவும் இக்களத்தே விட்டு வெறுங்கையோடு….” அலரி மாளிகையிலிருந்து தப்பியோட நேர்ந்தது, இறுதிக்காலம்வரை அவர் நெஞ்சில் வெந்து கொண்டிருக்கும் நிகழ்வு.

முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் மகிந்தவுக்கு பூரண பாதுகாப்பு வழங்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டென்றும், திருமலை கடற்படை முகாமில் அவரும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

தமிழீழத்தை அழித்தொழிப்பதில் தீவிரமாக இருந்த மகிந்தவுக்கு தமிழீழத்தில்தான் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. அந்த இடத்தைத் தெரிவு செய்தவர் தமிழினப் படுகொலையின் சூத்திரதாரியான கோதா. இவை வரலாற்றுக்குரிய தகவல்கள்.

மகாசங்கத்தினரின் விருப்புக்கு ஏற்றவாறு இடைக்கால நிர்வாகத்துக்கு பிரதமராக வருபவர்களென மூவரின் பெயர்கள் கூறப்பட்டன. ஆனால், அவர்கள் அனைவரையும் பின்தள்ளிவிட்டு ரணிலை பிரதமராக கோதா நியமித்துள்ளார். மகிந்த பதவி துறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே ரணினில் சம்மதத்தை கோதா பெற்ற தகவலும் இப்போது தெரிய வந்துள்ளது.

ரணிலும் ஏற்கனவே ஐந்து தடவைகள் பிரதமராக இருந்தவர். மகிந்த போன்று ஒரு தடவையும் முழுமையாக அப்பதவியில் அவர் இருக்கவில்லை. இப்போது ஆறாவது தடவையாக பிரதமராகியுள்ளார். இதுவும் ஆறு மாதங்களுக்கு மட்டுமே உரியது. இக்காலத்தில் அவர் செய்து முடிக்க வேண்டிய பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்களை வழங்கவும், ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தவும் அரசியல் சட்ட நடவடிக்கைகளை அவர் நிறைவு செய்ய வேண்டும்.

இவர் தலைமையிலான நிர்வாகத்துக்கு தற்காலிக ஒருமைப்பாட்டு அரசாங்கம் என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆறு மாத காலத்துக்குள் இதில் சம்பந்தப்படும் எவரும் குழப்பியடிக்கக் கூடாது. அதேசமயம் மக்களை மையப்படுத்திய புதிய அரசியல் யாப்புக்கு மக்களின் அங்கீகாரத்தைப் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இந்த நடைமுறைகளை ரணில் அமுல்படுத்த வேண்டுமென திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கும் போராட்டக்காரர்கள், குறிப்பிட்ட ஆறு மாதங்களும் கோதா கமவில் மக்கள் போராட்டம் தொடரும் எனவும் சுட்டியுள்ளனர்.

இதனை ஏற்பது போன்று ரணில் தமது புதிய முதலாவது அறிவிப்பில் கோதா கமவில் மக்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெறும் எனவும், பொலிசார் இதற்குத் தடையாக இருக்கக்கூடாது எனவும் தெரிவித்திருப்பது பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இலங்கை அரசியலில் கிழட்டு நரி எனப் பெயர் பெற்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பெறாமகன் ரணில் விக்கிரமசிங்க. அதாவது – ஜே.ஆரின் தாயாரும், ரணிலின் தாயாரின் தந்தையான லேக்ஹவுஸ் நிறுவனர் டி.ஆர். விஜேவர்த்தனவும் கூடப்பிறந்த சகோதரர்கள். 1977ம் ஆண்டுத் தேர்தலில் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான ரணில் கடந்த நாற்பத்தைந்து வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். தமது அரசியல் வாரிசாக ரணிலை வளர்த்து வந்த ஜே.ஆரின் குள்ளத்தனங்கள் அனைத்தும் ரணிலிடம் உண்டு.

அதேசமயம், சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற இலங்கையின் பிரபல்யமான அரசியல் தலைவராக மதிக்கப்படுவது ரணிலுக்குக் கிடைத்த பிளஸ் பொயின்ற். இவரை பல உலக நாடுகள் ஆட்சி மாற்றத்துக்குரியவராக கணிப்பது, இப்போதைய நிலையில் இலங்கைக்கு பொருளாதார மீட்சியை ஏற்படுத்த இவருக்கு வாய்ப்பாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் இவரது ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து எவருமே தெரிவாகவில்லை. முதல்முறையாக ரணில் படுதோல்வி கண்டார். ஆனால், இக்கட்சிக்குக் கிடைத்த மொத்த வாக்குகளின் அடிப்படையில், தேசியப் பட்டியலூடாக எம்.பி.யானார்.

இதுவரை காலமும் ராசியில்லாத ராஜாவாக இருந்த ரணிலுக்கு இப்போது கிடைத்துள்ள பிரதமர்  பதவி ராசியானதா இல்லையா என்பதை அறிய சில மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும். கட்சி மாறுவதில் பெயர் பெற்ற பல எம்.பிக்கள் மந்திரி ஆசையில் இவரது கூட்டில் பாய தயாராகிறார்கள். மறுபுறத்தில் கோதபாய வீட்டுக்குப் போ என்னும் போராட்டம் கோதா கமவில் தொடர்ந்து கொண்டே இருக்கப் போகிறது.

கரணம் தப்பினால் மரணம் என்னும் அடுத்த ஆறு மாதங்கள் என்பது ஆழ்கடலில் சுழியோடுவது போன்றது. இவ்வேளை பொதுவாகப் பலர் மனதிலும் எழும் கேள்விகள் சிலவுண்டு.

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ராணுவ ஆட்சியை கோதா ஏற்படுத்துவாரா? நெருக்கடியை சமாளிக்க முடியாது சில மாதங்களில் ஜனாதிபதி பதவியைத் துறந்து நாட்டை விட்டு கோதா ஓடுவாரா? தேர்தல் இன்றியே பிரதமராக வந்தது போன்று ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு ரணிலுக்குக் கிடைக்குமா? கோதா கம போராட்டம் எவ்வாறு மாற்றம் எடுக்கும்?

முள்ளிவாய்க்கால் வாரத்தில் இக்கேள்விகள் மனதைத் துளைப்பதை தடுக்க முடியவில்லை.

பனங்காட்டான்