விடாது கர்மவினை!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கற்பிக்கப்படுமா…

288 0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான நாட்கள் அருகில் வந்துவிட்டன. இந்நாளுக்கான தயார்படுத்தல் வேலைகள் தமிழர் தாயகப் பகுதிகள், புலம்பெயர் தேசங்கள், தமிழகம் என பரந்துபட்டளவில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

பௌதீக ரீதியான இந்தத் தயார்படுத்தல்களைத் தாண்டி உள அளவிலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தந்த கோர நினைவுகளை மக்கள் உரையாடவும் தொடங்கிவிட்டனர்.

இறுதிப் போர் நாட்களில் இறந்த தம் உறவினர்களுக்கான குடும்ப அஞ்சலிகளை வீடுகளெங்கும் நினைந்துருகிக்கொண்டிருக்கின்றனர். ஊடகங்களின், சமூக வலைதளங்களின் பிரதான பேசுபொருள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைப் பற்றியதாக மாறியிருக்கின்றது.

விடாது கர்மவினை!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கற்பிக்கப்படுமா...

விடாது கர்மவினை

வழமையைவிட இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களில் ஒரு பெருமூச்சு உண்டு. அது நீண்டதொரு வலியின் பின் வெளிவரும் ஆறுதல் மூச்சு. தாங்கிய வலிகளுக்குப் காலச் சக்கரம் தன் பெறுமதியை வழங்கும் என்ற நம்பிக்கை துலங்கியிருக்கின்றது.

கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்த ராஜபக்சவினரை உலகம் தண்டிக்காவிட்டாலும், தமிழர்க்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் கர்மவினை மீண்டும் மீண்டும் கருவறுக்கும் என்பதுவே அந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கையைப் பற்றிப்பிடித்தபடியே இம்முறை நினைவேந்தலுக்கான தயார்படுத்தல்களில் தமிழர்கள் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றனர்.

விடாது கர்மவினை!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கற்பிக்கப்படுமா...

வரையறை தேவை

இவ்வாறு தமிழர்களின் ஆன்மத்தில் கலந்துவிட்டிருக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வான ஒரு வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? அப்படி வரைமுறைப்படுத்தலுக்குள் கொண்டுவருவது அவசியமானதா என்பவை குறித்தும் உணர்வுமிகு இவ்வேளையில் உரையாட வேண்டியது அவசியமாகிறது.

தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டது மானுட குலத்திற்கு எதிரான குற்றம் மட்டுமல்ல, இந்நூற்றாண்டின் பாரியதொரு இனப்படுகொலையுமாகும். கட்டம்கட்டமாகக் கட்டவிழ்க்கப்பட்டு, இறுதியில் இனத்தை முற்றாக அழிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட படுகொலையின் மொத்த சாட்சியமுமாக முள்ளிவாய்க்கால் நம் முன் நிற்கிறது. அதனை வெளியுலகுபடுத்த நிச்சயமாக ஒரு வரைமுறை தேவை.

விடாது கர்மவினை!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கற்பிக்கப்படுமா...

அவ்வாறானதொரு நினைவேந்தல் கட்டமைப்பின் அவசியம் குறித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அம்மண்ணில் நடத்தத் தொடங்கிய காலம் தொட்டு பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

2010 ஆம் ஆண்டில் மிகுந்த இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியில் முதல் நிகழ்வு இடம்பெறும்போதே இதற்கொரு கட்டமைப்பு அவசியம் என்ற விடயம் உணரப்பட்டது. அதன்படி தொடர்ந்து வந்த சில வருட நினைவேந்தல்கள் முள்ளிவாய்க்காலில் உள்ள தேவாலயம் ஒன்றில் இறைவழிபாட்டோடு இடம்பெற்றன.

விடாது கர்மவினை!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கற்பிக்கப்படுமா...

முள்ளிவாய்க்கால் நினைவேந்நதல் கட்டமைப்பு

அவ்விடத்திலேயே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுபடுத்தும் – ஆவணப்படுத்தும் நினைவுத்தூபியொன்றும் அமைக்கப்பட்டது. கருங்கல் துண்டுகளில் இனப்படுகொலையின்போது கொல்லப்பட்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு, காட்சிப்படுத்தும் வேலைகளும் இடம்பெற்றன.

நினைவுநாள் நெருங்கும்வேளையில் இவ்வளாகத்திற்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் அவற்றை அடித்துநொருக்கினர். அதனை ஒழுங்குபடுத்தியவர்கள் மீதும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இச்செயற்பாடுகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை, அது தொடர்பான செயற்பாடுகளை ஒரு கட்டமைப்பின் கீழ் மேற்கொள்கொள்வதற்கான கட்டாயத்தை வலியுறுத்தின. இதன் பயனாகவே 2016 ஆம் ஆண்டிலிருந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கட்டமைப்பு செயற்படத்தொடங்கியது.

விடாது கர்மவினை!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கற்பிக்கப்படுமா...

அச்சுறுத்தல்களுக்குப் பஞ்சமில்லை

இக்கட்டமைப்பு நினைவேந்தல் நிகழ்வுகளை குறித்த நாளில் சரிவர ஒழுங்குபடுத்தியது. இதுவரையான காலப்பகுதியில் நினைவேந்தல் தொடர்பில் அவ்வப்போது அரசியல் தலையீடுகள் தொடர்பான குழப்பங்கள் ஏற்பட்டபோதிலும், மே 18 என்பது எவ்வித குழப்பங்களுமற்ற நினைவேந்தலுக்குரிய நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதுவே இக்கட்டமைப்பின் வெற்றியெனலாம்.

சமயத் தலைவர்களை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் இந்நிகழ்வுகளுக்கு ஏற்படுத்தப்படும் தடைகள், மிரட்டல்கள், கண்காணிப்புக்களுக்கும் பஞ்சமிருப்பதில்லை. ஈஸ்டர் தாக்குதல்கள், கொரோனா பேரிடர் போன்றவற்றைக் காரணம் காட்டி மாத்திரமே இந்நிகழ்வுகளுக்கு தடையேற்படுத்தப்பட்டன.

விடாது கர்மவினை!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கற்பிக்கப்படுமா...

தன்னியல்பாகப் பின்தொடரல்

தடைகள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலானது 12 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. இந்தப் பன்னிரு ஆண்டுகளில் இனப்படுகொலையின் நினைவு நிகழ்வானது வரையறையொன்றை வகுத்திருக்க வேண்டும்.

இதுவரையான காலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நினைவுநிகழ்வுகளில், மே.18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்தில் திரள்வது, 10.30 மணிக்குத் தீபமேற்றி அஞ்சலிப்பது, அறிக்கை வெளியிடுவது, முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறுவது போன்ற விடயங்கள் வரைவுபடுத்தப்பட்டிருக்கின்றன. அவை ஒரு மரபாகப் பின்பற்றப்பட்டுவருகின்றன.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்றவுடன் மக்கள் இவற்றுக்குத் தயாரகிவிடுகின்றனர். மரபாக மாறும் விடயங்களுக்கு உண்டான தன்னியல்பாகப் பின்தொடரல் இங்கேயும் சாத்தியமாகிவிட்டது. அதுவே நினைவேந்தல் கட்டமைப்பின் பெரும் வெற்றியெனலாம்.

விடாது கர்மவினை!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கற்பிக்கப்படுமா...

நினைவேந்தலை மரபாக மாற்றுவது

ஆனால் இந்த நான்கு நிகழ்வுகள் மாத்திரமே தமிழினப் படுகொலையை வரலாறு கடத்தும் மரபொன்றுக்குப் போதுமானவை அல்ல. இனப்படுகொலை ஒரு கற்பித்தல் முறையாக மாற்றம் பெறல்வேண்டும். அந்தக் கற்பித்தல் குழந்தைக்கும் முதியவர்க்கும் எதிரிக்கும் புரியும்படியான நிகழ்வாக ஒழுங்குபடுத்தப்படல் வேண்டும்.

அந்தக் கற்பித்தல் முறையானது மேற்குறித்த மரபாக இனத்தோடு கலந்துவிட்டால், எத்தனை யுகமாயினும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தமிழ் இனப்படுகொலையின் குறியீட்டு நிகழ்வாக சந்ததி கடத்துவது இலகுவானதாக மாறிவிடும். அந்தக் கற்பித்தலுக்கு எந்தெந்த நிகழ்வை எப்படியாற்றுவது என்பதைக் குறிக்கும் ஒரு வரையறை அவசியம்.

விடாது கர்மவினை!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கற்பிக்கப்படுமா...

நினைவேந்தலைக் கற்பித்தலாக்குவது

அதுமட்டுமல்லாது கொன்றொழிக்கப்பட்ட மக்களை நினைந்துருகி எழுச்சியடைதல் தன்னியல்பாக இடம்பெறும். அவ்வாறானதொரு வெளியில் திரளும் மக்களின் மௌனத்திற்கும், ஒரு துளி கண்ணீருக்கும், குமுறலுக்குமே பாரியதோர் இனவெழுச்சி உண்டாகும்.

மே 18 இல் முள்ளிவாய்க்கால் கொதி நிலத்தில் நிற்கும்போது பாதங்கள் மாத்திரமே சுடுவதில்லை. நம் மொத்த ஆன்மாவும் கொதித்துக்கொண்டிருக்கும். இந்நிலத்தில் ஓரினத்தின் மீது ஏவப்பட்ட மொத்த அவலத்திற்கும் நீதி கேட்டு குரலெழுப்பிக்கொண்டிருக்கும். அதில் கலந்திருக்கும் அரசியல் சுயாதீனமாக இந்த வெளியெங்கும் வியாபித்துப் பரவும்.

விதைக்கப்பட்டோர் நினைவாக சுயமாகத் திரளும் மக்கள் வெள்ளத்தினால் தான் இவையும் சாத்தியப்படும். இந்த சாத்தியப்பாட்டு அரசியல் மையமாக நினைவேந்தல் திடலை மாற்ற வேண்டும். அதற்காகப் பேரணிகளோ, அழைத்து வருதல்களோ அவசியமல்ல. நினைவேந்தல் கற்பித்தல் சரியாகப் புகட்டப்பட அதனை நோக்கி மக்கள் திரள்வர். இன விடுதலைப் பிரகடனத்தை ஏந்திச் செல்வர்.

விடாது கர்மவினை!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கற்பிக்கப்படுமா...

முள்ளிவாய்க்கால் கஞ்சி

உதாரணத்திற்கு ஒரு விடயத்தை இவ்விடத்தில் பதிவிடலாம். முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்படும் அருமருந்தான உணவை நினைவேந்தல் நாட்களில் மக்கள் தம்மிடையே பகிர்ந்துகொள்கின்றனர். இதன் வழியாக போரின் இறுதி நாட்களில் திறந்த வெளி இனப்படுகொலை சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் மக்களுக்கு உணவு, மருந்து பொருட்கள் எவையும் அனுமதிக்கப்படவில்லை.

துப்பாக்கி ரவைகளும், எறிகணைகளும் கொல்லாது விட்டவர்களைப் பட்டினி போட்டுக் கொல்லுதல் என்ற நோக்கில் இத்தடைகள் அரசினால் ஏவப்பட்டன. அச்சந்தர்ப்பத்தில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம், விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரிவினர், சில தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து கிடைத்த அரிசியையும், உப்பையும் நீரிலிட்டு சமைத்து கஞ்சியாக மக்களுக்கு வழங்கி பசியாற்றினர். இதில் மாத்தளனில் காய்ச்சப்பட்ட கஞ்சியில் கலக்கப்பட்ட அரிசி, தேங்காயின் அளவிற்கும், முள்ளிவாய்க்காலில் கலக்கப்பட்ட அரிசி, தேங்காயின் அளவிற்கும் வேறுபாடு உண்டு.

இனப்படுகொலை வலயம் சுருங்கச்சுருங்க கஞ்சியில் சேர்க்கப்படும் அரிசியின் அளவு குறைந்து நீரின் அளவு அதிகரித்துக்கொண்டு போனது. இந்தக் கஞ்சியே முள்ளிவாய்க்கால் மானுடலப் பேரவலத்தின் பசி குறியீடு.

விடாது கர்மவினை!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கற்பிக்கப்படுமா...

வெறும் உப்புத்தண்ணீரில் சில அரிசிப் பருக்கைகளைக் கலந்தே பசியாற்றினர். அந்த நினைவை மீள நினைவுபடுத்த அதே சுவையுடன் கூடிய கஞ்சியை வழங்குவதே கனதிமிக்கதாகும்.

13 ஆண்டுகளுக்குள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் விரிவுபெற்றிருக்கின்றன. எல்லா இடங்களிலும் மக்கள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுபடுத்தும் நிகழ்வுகளில் ஈடுபடுகின்றனர். அதில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படும் நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. ஆனால் அந்தச் சுவையில் இனத்தின் அவலம் மாறுபடுகின்றது. அதன் சுவையில் ஏற்படுத்தப்படும் மாற்றமானது இனப்படுகொலையின் கோரத்தை, அது சந்ததிகளுக்கு கொண்டுசேர்க்க வேண்டிய காரத்தைக் குறைத்துவிடுகின்றது. இந்த உதாரணமானது நினைவேந்தல் குறித்த அனைத்து நிகழ்வுகளுக்கும் பொருத்தமானதாகும்.

மாவீரர் நாளை இன்றளவும் மக்கள் அதே உணர்வெழுச்சியுடன் கடைபிடிக்க இத்தகையதொரு வரைமுறையை உருவாக்கி மரபாகக் கடத்தியமைதான் காரணம். எத்தனை தடைகள், அச்சுறுத்தல்கள், மேற்கொள்ளப்படினும் மக்கள் தாமாக நினைவுநாளை உருவாக்கிக்கொள்கின்றனர்.

விடாது கர்மவினை!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கற்பிக்கப்படுமா...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே கடைபிடிக்கப்பட்டுவருகின்றது. அடுத்தவருடம் நடக்குமா என்ற அங்கலாய்ப்புடன்தான் இவ்வருட நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடிய ஜனநாயகச்சூழல்தான் இப்போதும் நிகழ்வுகின்றது.

எனவேதான் மக்களாக, சுயமாக இந்நிகழ்வை ஆற்றக்கூடிய கற்பித்தல் செயற்பாடொன்றை நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்படுத்த வேண்டும்.

விடாது கர்மவினை!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கற்பிக்கப்படுமா...

ஜெரா