நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோட்டன் தியகல பிரதான வீதியில் பாரிய கல்லொன்று சரிந்து வீழ்ந்ததில் வீதி உடைந்து போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று 15 ஆம் திகதி காலை 2 மணியளவில் 5ம் கட்டைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தினை தொடர்ந்து இரண்டு பக்கங்களிலும் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது.
இவ்வீதியினை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த சில தினங்களாக மத்திய மலைநாட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. இப்பிரதேசத்துக்கு பெய்த கடும் மழை காரணமாகவே இந்த கற்கள் சரிந்து வீதி சேதமடைந்துள்ளன.
இதேவேளை கடந்த சில தினங்களாக அடைமழை பெய்து வருவதனால் மலையகத்திலுள்ள கெனியொன், லக்ஸபான, மேல் கொத்மலை ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து வான்பாயும் அளவினை எட்டியுள்ளன.
காசல்ரி, மவுசாகலை ஆகிய நீர்தேக்கங்களிலும் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக நீர்தேக்கங்களுக்கு பொறுப்பான மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நீர்த்தேக்கங்களின் நீர் உயர்ந்துள்ளதன் காரணமாக நீர் மின் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு தொடர்ச்சியாக மழையுடனான காலநிலை நிலவி வருவதனால் ஹட்டன் கொழும்பு, ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்திட்டு சரிந்து விழுந்துள்ளன.
இந்த மழையுடன் பனிமூட்டம் காணப்படுவதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.