லசந்த விக்கிரமதுங்கவின் கொலை வழக்கு தொடர்பில் தாம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், தெ சண்டே லீடர் செய்தித்தாளில் வெளியான மிக் உடன்படிக்கை தொடா்பான தகவல்களே, அவரது கொலைக்கான முக்கிய நோக்கத்தை உருவாக்கியிருக்கலாம் என்று தாம் நம்புவதாக, இலங்கையின் முன்னாள் பொலிஸ் அதிகாரி நிசாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
இவர், 2019இல் கோட்டாபயவின் ஆட்சி வந்தவுடன் சுவிட்ஸர்லாந்துக்கு தப்பிச் சென்றவராவார்.
இந்தநிலையில் நெதர்லாந்து ஹேக்கில் கடந்த 12ஆம் திகதியன்று சர்வதேச பத்திரிகை சுதந்திர அமைப்புகளின் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் நடைபெற்ற லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயத்தில் அவர் சாட்சியம் அளித்தார்.
இதன்போது லசந்தவின் கொலையாளிகள் பயன்படுத்திய கைத்தொலைபேசிகளின் கோபுரப் பதிவுகள் மூலம் அடையாளம் காணப்பட்டதாக நிசாந்த சில்வா குறிப்பிட்டார். விக்கிரமதுங்கவுடன் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் மற்றும் சாட்சிகளின் சாட்சியங்களும் இந்த விசாரணையின்போது பதிவு செய்யப்பட்டன.
அவர்கள் இலங்கையில் ஊடகவியலாளர்கள் தமது பணிகளை மேற்கொள்வதில் எதிர்கொள்ளும் பல தடைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.
முக்கிய சாட்சிகளான சந்தியா எக்னெலிகொட, பாஷான அபேவர்தன, தில்ருக்ஷி ஹந்துன்நெத்தி மற்றும் முன்னாள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பரிசோதகர் நிஷாந்த சில்வா ஆகியோரிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
2010 ஜனவரியில் காணாமல் போன கேலிச்சித்திர ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட, அந்த நேரத்தில் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை மற்றும் தமது கணவர் காணாமல் போனதற்கு காரணமான நிகழ்வுகளை விரிவாக விளக்கினார்.
தனது மொட்டையடிக்கப்பட்ட தலை மற்றும் கறுப்பு உடையைப் பற்றி குறிப்பிடுகையில், இரண்டு ஆண் குழந்தைகளின் தாயான தனது கணவரின் வழக்கு தீர்க்கப்படும் வரை மீண்டும் தலைமுடியை வளர்க்கவோ அல்லது கறுப்பு நிறத்தைத் தவிர வேறு எதையும் அணியவோ கூடாது என்ற முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
2006 ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளரான பிரபாஷன அபேவர்தன, புலம்பெயர்ந்து வாழும் ஊடகவியலாளர், குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்கள் 2005 ஆம் ஆண்டின் கொடூரமான காலத்தில் என்னென்ன துன்பங்களை அனுபவித்தார்கள் என்பதை விரிவாக விளக்கினார்.
விக்ரமதுங்க படுகொலை செய்யப்படும் வரையில் அவருடன் பணியாற்றிய ஊடகவியலாளர் தில்ருக்ஷி ஹந்துன்நெத்தி, மிக் விமான ஒப்பந்தம் தொடர்பில் செய்தி அறையில் தமது ஆசிரியருடன் பணிபுரிந்த நினைவுகள் தொடர்பில் விளக்கினார்.
இதேவேளை விசாரணையில் சாட்சியமளித்த லசந்த விக்கிரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்கிரமதுங்கவின் சார்பில் முன்னிலையான மனித உரிமைகள் சட்டத்தரணி நுஷின் சர்க்கரட்டி, லசந்தவின் மகள் சார்பில் வாசிக்கப்பட்ட வாக்குமூலத்துடன் விசாரணையை ஆரம்பித்தார்.
ராஜபக்சவின் தவறான ஆட்சி மற்றும் சர்வாதிகார ஆட்சியின் கீழ் பல வருடங்களாக துன்பங்களை அனுபவித்து வந்த மக்கள் ஒரே கடுமையான குரலில் எழுந்து, இந்த தவறான தலைவர்களை அரசாங்கத்திலிருந்து வெளியேறுமாறு கோருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.