திருநெல்வேலி அருகே 300 அடி ஆழ கல் குவாரியில் ராட்சத பாறை சரிந்து தொழிலாளி உயிரிழப்பு; 2 பேருக்கு சிகிச்சை: பாறைகள் சரிவதால் 3 பேரை மீட்பதில் சிக்கல்

163 0

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டம் தருவை அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரி உள்ளது. இந்த கல் குவாரியில் சுமார் 300 அடி ஆழத்துக்கு தோண்டி, பாறைகள் எடுக்கப்பட்டு வந்தன. நேற்று முன்தினம் இரவில் கல்குவாரி பள்ளத்தினுள், 3 பொக்லைன் இயந்திரங்கள், 2 லாரிகள் மூலம் தொழிலாளர்கள் 6 பேர் பாறைகளை அள்ளிக் கொண்டு இருந்தனர்.

நள்ளிரவில் மேல் மட்டத்தில் இருந்து ராட்சத பாறை சரிந்து கல் குவாரி பள்ளத்தில் விழுந்தது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த முருகன், விஜய், செல்வம், மற்றொரு முருகன், ராஜேந்திரன், செல்வகுமார் ஆகிய 6 பேரும் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கினர். பாறைகள் விழுந்ததில் பொக்லைன் இயந்திரங்கள், லாரிகள் நசுங்கின.

பாளையங்கோட்டை தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். நள்ளிரவு நேரம் மற்றும் கல் குவாரியின் அடிமட்டம் வரை அமைக்கப்பட்டிருந்த பாதையில் பாறைகள் விழுந்து கிடந்ததால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டது.

ராமநாதபுரம் ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமான தளத்தில் இருந்து வந்த ஹெலிகாப்டர் மூலம், மீட்புப் பணியை மேற்கொள்ள முடியாது எனத் தெரியவந்ததால் அது திரும்பிச் சென்றது.