படுகர் தினத்தை முன்னிட்டு பாரம்பரிய உடையுடன், நடனமாடி கொண்டாடிய படுகர் இன மக்கள்

222 0

படுகர் தின விழாவில் படுகர்களின் தந்தை என்று அழைக்கப்படும் மறைந்த ராவ் பகதூர் ஆரி கவுடர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, அமைதியைப் போற்றும் வகையில் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் பொரங்காடு, தொத நாடு, மேக்கு நாடு, குந்தெ சீமை என நான்கு சீமைக்குட்பட்ட கிராமங்களில் ஏராளமான படுகர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இதில் ஒன்றான பொரங்காடு சீமை படுகர் நலச் சங்கம் சார்பில் ஆண்டு தோறும் மே மாதம் 15-ந் தேதியை படுகர் தினமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஆண்டு படுகர் தின விழா நேற்று பொரங்காடு சீமை படுகர் நலச் சங்கம் சார்பில், கோத்தகிரி நட்டக்கல் கிராம மைதானத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தின் தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். 19 ஊர்த் தலைவர் ராமாகவுடர், கைகாரு சீமை தலைவர் நஞ்சா கவுடர், ஆயிரம் வீடு தலைவர் சீராளன், பார்ப்பத்தி ஆலா கவுடர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக பேரவை மாவட்ட செயலாளருமான சாந்திராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் படுகர்களின் தந்தை என்று அழைக்கப்படும் மறைந்த ராவ் பகதூர் ஆரி கவுடர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, அமைதியைப் போற்றும் வகையில் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து எழுத்தாளர் ஓரசோலை சுனில் ஜோகீ எழுதிய படுகர்களின் வரலாறு குறித்த ‘மாதி’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

விழாவில் பங்கேற்ற அனைவரும் தங்களது பாரம்பரிய வெள்ளை ஆடை அணிந்திருந்தனர். பின்னர் அவர்கள், தங்கள் பாரம்பரிய இசை கருவிகளை ஒலிக்க விட்டு, தங்களின் பாரம்பரிய நடனத்தை ஆடி பாடி படுகர் தினத்தை விமரிசையாக கொண்டாடினர். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும், நாடகங்களும் நடத்தப்பட்டது.

இதில் கோத்தகிரி சுற்றுவட்டார அனைத்து படுகர் வாழ் மக்கள், குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.