நட்பு நாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள கலந்துரையாடல்களின் பிரதிபலன்கள் சாதகமாகவுள்ளன. நாட்டில் தற்போதுள்ள நிலைமை தொடர்பில் மேலும் ஆழமாக குறித்த நாடுகளுக்கு தெளிவுபடுத்தி அவற்றுடனான ஒப்பந்தங்களுக்குச் செல்லும் பட்சத்தில் எதிர்வரும் 2 அல்லது 3 மாதங்களுக்குள் சுபீட்சமானதொரு எதிர்காலத்திற்குச் செல்ல முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக முன்னாள் அமைச்சர் ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளதோடு , குறித்த ஆர்ப்பாட்டத்திலுள்ள இளைஞர்கள் முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாட தயாராக உள்ளதாகவும் , அவர்களை அரசாங்கம் மற்றும் பாராளுமன்ற செயற்பாடுகளில் இணைத்துக் கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :
நட்பு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஏனைய இராஜதந்திரிகளுடன் இரு தினங்கள் தீர்க்கமான கலந்துரையாடல்களை முன்னெடுத்தேன்.
அதன் மூலம் கிடைக்கப் பெற்றுள்ள பிரதிபலன்கள் சிறந்தவையாகவுள்ளன. நாட்டில் தற்போதுள்ள நிலைமை தொடர்பில் மேலும் ஆழமாக குறித்த நாடுகளுக்கு தெளிவுபடுத்தி அவற்றுடனான ஒப்பந்தங்களுக்குச் செல்ல வேண்டும்.
இந்தியா போன்ற நாடுகளுடன் அவ்வாறான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எவ்வாறிருப்பினும் இந்த வேலைத்திட்டங்களை நிறைவு செய்வதற்கு இன்னும் 2 அல்லது 3 மாதங்களேனும் செல்லும்.
அதன் பின்னர் குறுங்கால மற்றும் நீண்ட கால எதிர்காலத்தை சுபீட்சமான நிலைமைக்கு கொண்டு செல்ல வாய்ப்புள்ளது.
குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
<p>எவ்வாறிருப்பினும் இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படும் அடுத்து வரும் சில வாரங்களிலேயே கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும்.
நாட்டின் பொருளாதாரம் , எரிபொருள் மற்றும் உரம் குறித்து இரு தினங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது. குறித்த மதிப்பீடுகளில் நாம் இதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ளவில்லை என்பதால் , தட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும். எனவே அடுத்த ஓரிரு வாரங்களே எமக்கு மிகவும் நெருக்கடிமிக்க காலமாக அமையும்.
அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பதன் மூலம் இந்த பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள முடியும் என்று நான் நம்புகின்றேன். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் இளைஞர்களின் குரல் தோற்றம் பெற்றுள்ளது. அந்த இளைஞர்களின் குரல் கோருவது தமக்கு மாற்றம் வேண்டும் என்பதையாகும். முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதே அவர்களது இலக்காகவுள்ளது. இவர்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘கோட்டா கோ கம’ தொடர்பிலும் பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றேன்.
‘கோட்டா கோ கம’ நீக்கப்பட மாட்டாது என்று நான் தெரிவித்திருக்கின்றேன். அதனை நாம் பாதுகாப்போம். இந்நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான தேவைகளைக் கண்டறிவதற்காக முன்னாள் அமைச்சர் ருவன் விஜேவர்தனவை நியமித்துள்ளேன்.
கொழும்பு மாநாகர மேயரிடம் இதற்கான உதவிகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த இடம் உரித்துடைய நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதிநிதியொருவரும் , சுகாதார அமைச்சின் பிரதிநிதியொருவரும் , அமைதியைப் பாதுகாப்பதற்கு பொலிஸ் மற்றும் இராணுவ குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவருடனும் கலந்துரையாடி தேவைகளை நிறைவேற்றுவதற்கும் , குறித்த பகுதியை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘கோட்ட கோ கம’ வை நிர்வகிக்க வேண்டியது அங்கிருக்கும் அந்த குழுவாகும்.
மாறாக அரசாங்கம் அல்ல. எமது வேலை அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகும். அதே போன்று யோசனைகளை முன்வைத்துள்ள ‘கோட்டா கோ கம’ இளம் தலைமுறையினரை அரசாங்கத்துடனும் , ஏனைய வேலைத்திட்டங்களுடனும் , பாராளுமன்ற செயற்பாடுகளுடனும் எவ்வாறு இணைத்துக் கொள்வது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அவர்களால் எமக்கு 8 யோசனைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுக்க விரும்புகின்றோம். குறித்த யோசனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஷெஹார ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்காக பசுன் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். தேவையேற்படின் எனது அலுவலகத்திலுள்ள பந்துல அபயதீரவுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்க முடியும்
இது தொடர்பில் தற்போது இணையதளம் ஒன்றும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
இளைஞர்களின் தேவைகளுக்கேற்ப மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய உங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு எவராலும் சேதம் ஏற்படுத்தப்பட மாட்டாது என்று உறுதியளிக்கின்றேன் என்றார்.