‘கோட்டா கோ கம’ தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய முடியாமைக்கான காரணம் என்ன ?

208 0

கோட்டா கோ கம போராட்டம் மீதான தாக்குதல்களை மேற்கொண்ட பிரதான சந்தேகநபர்களை இதுவரையில் கைது செய்ய முடியாமல் போயுள்ளமைக்காக காரணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் அறியத்தருமாறு கோரி ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன பொலிஸ்மா அதிபர் சி.டீ.விக்கிரமரத்னவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து , அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ருவன் விஜேவர்தன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டார்

அதற்கமையவே ருவன் விஜேவர்தன இவ்வாறு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கோட்டா கோ கம’ மற்றும் ‘மைனா கோ கம’ ஆர்ப்பாட்டத்தின் மீது கடந்த 9 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களையடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்ட வன்முறைகளின் காரணமாக அரச மற்றும் தனியார் சொத்துக்கள் பலவற்றுக்கு சேதம் விழைவிக்கப்பட்டதோடு , பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளடங்கலாக 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்று உங்களால் நியமிக்கப்பட்டது. அதே போன்று உரிய விசாரணைகளை முன்னெடுத்து தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இவை இவ்வாறிருக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்காக வருகை தந்தவர்களோ அல்லது தாக்குதல்களை மேற்கொண்டவர்களோ இதுவரையில் கைது செய்யப்படவில்லை. அன்றைய வன்முறைகளுக்கு பொறுப்பு கூற வேண்டிய நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு கோட்டை நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறைப்பாடொன்றும் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைது செய்யாமல் , தாக்குதல்களின் பின்னர் ஏற்பட்ட வன்முறைகளுடன் தொடர்புடைய நபர்கள் மாத்திரம் கைது செய்யப்பட்டுள்ளமையானது நியாயமற்றதாகும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நிராயுதபாணிகளான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது கூட அண்மையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் இடம்பெற்ற சில மணித்தியாலங்களுக்குள் அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதோடு , இது தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை மதிக்கின்றோம்.
எவ்வாறிருப்பினும் இவ்வாறான பின்னணியில் நிராயுதபாணிகளான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர்களில் பிரதான சந்தேகநபரை பொலிஸாரால் கைது செய்ய முடியாமல் போயுள்ளமை கவலைக்குரிய விடயமாகும். பொது மக்களும் இவ்விடயம் தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் உள்ளனர்.

கோட்டாகம ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான பொறுப்பினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்னிடம் வழங்கியுள்ளார்.

எனவே இந்த போராட்டம் மீதான தாக்குதல்களை மேற்கொண்ட பிரதான சந்தேகநபர்களை இதுவரையில் கைது செய்ய முடியாமல் போயுள்ளமைக்காக காரணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் அறியத்தருமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.