21 ஆம் திருத்தம் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் : சட்ட வரைபை தயாரித்து விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை – பிரதமர் ரணில்

252 0

அரசியலமைப்பின் 21 ஆம் திருத்தம் தொடர்பில் இன்று திங்கட்கிழமை கலந்துரையாடப்படவுள்ளது.
<p>கலந்துரையாடலின் பின்னர் அது தொடர்பான சட்ட வரைபு தயாரிக்கப்பட்டு , பின்னர் அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்புக்களின் பின்னர் இதனைத் தெரிவித்த பிரதமர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார்.

மருந்து, உணவு மற்றும் உர விநியோக நெருக்கடிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் இந்த சந்திப்புக்களின் போது அவதானம் செலுத்தப்பட்டது.

அதற்கமைய இந்த துறைகளுக்காக மேலும் ஒத்துழைப்புக்களை வழங்குவதாக குறித்த பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.

இந்த ஒத்துழைப்புக்களின் அளவு அதிகரிக்கப்படும் என்பதோடு , பொருளாதாரத்துறைக்கும் அவை கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இதற்கு முன்னர் கலந்துரையாடல்களில் கலந்து கொண்ட நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

எனினும் எமக்கு தற்போதுள்ள பிரச்சினை அடுத்த வாரத்திற்கான எரிபொருள் கொடுப்பனவிற்கான நிதியைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் சவால் ஆகும்.

வங்கிகளில் டொலர் தட்டுப்பாடு காணப்படுகின்றமையால் நாம் வேறு வழிமுறையூடாக நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

இதே வேளை இன்று திங்கட்கிழமை 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்து பின்னர் அதற்கான சட்ட வரைபை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும்.

அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நிலைமை தொடர்பான மீளாய்வுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன

இது தொடர்பில் முழுமையாக நாட்டு மக்களுக்கு அறிவிப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன் என்றார்.

இந்நிலையில் நிதி நிறுவனங்கள் இரண்டுடனான கலந்துரையாடலுக்கு இணையாக சர்வதேச பேரவையொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் வெளிநாட்டு பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரணில் விக்கிரமசிங்க, 21 ஆவது அரசியலமைப்பு, ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி,Ranil Wickremesinghe, 21st Constitution, Asian Development Bank, World Bank