நாட்டில் இடம்பெற்றுள்ள பல ஊழல் மற்றும் கலவரங்களுக்கு சூத்திரதாரிகளான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் அமைச்சர்கள், மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட அனைவரும் பாரபட்சமின்றி கைது செய்யப்பட வேண்டும் என கிழக்கு மக்கள் குரல்களின் அமைப்பின் அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா கோரிக்கை விடுத்துள்ளார்.
திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் காரியாலயத்தில் இன்று(15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் தலைமையில் உருவான அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட பல அரசியல்வாதிகளின் ஊழல் மிக்க ஆட்சியினால் நாடு இவ்வாறானதொரு பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
கடந்த மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான அமைதி ஆர்ப்பாட்டத்தில் குண்டர்களை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்திய முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற வன்முறைக்கு மூல காரணமானவர்கள்.
எனவே அனைவரையும் பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கிழக்கு மக்கள் குரலில் அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இவ்வாறான ஊழல் மிக்க ராஜபக்ச குடும்பத்தினர் மட்டுமல்லாது முன்னாள் அமைச்சர்களை கலவரத்திற்கு காரணமான குண்டர்களை ஏவி விட்ட அரசியல்வாதிகளை திருகோணமலை கடற்படை முகாமில் மறைத்து வைத்துக்கொணடு ஊழல் வாதிகளையும் வன்முறை காரர்களையும் அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் குறித்த அரசாங்கம் நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதில் மும்முரமாக இருப்பதை எம்மால் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது எனவும் நாட்டிற்கு டொலர்கள் தேவைப்படுகின்றது.
நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்து டொலர்களை கொள்வனவு செய்யும் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் தற்போது நாட்டின் பெரும்பாலான தீவுகள் வெளிநாடுகளுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான அரசாங்கத்தை தக்க வைப்பதற்காக வெறுமனே பிரதமரை மாற்றி அமைச்சர்களை மாற்றி மக்களை இன்னமும் இந்த அரசாங்கம் ஏமாற்றிக் கொண்டு இருப்பதை கிழக்கு மக்களின் குரல் சார்பில் வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மக்களின் குரல்கள் அமைப்பின் அமைப்பாளர் அருண்” ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.