தமிழகத்தில் அனைத்து தரப்பினருக்கும் நன்மைகள் செய்யும் திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது- திருச்சி சிவா எம்.பி. பேச்சு

219 0

பணக்காரர்களுக்கு என்று இல்லாமல் ஏழை, எளியவர்கள், நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பினருக்கும் நன்மைகளை செய்யக்கூடிய திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காயல்பட்டினத்தில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரான திருச்சி சிவா எம்.பி., தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேசியதாவது:-

தமிழக அரசியலில் தி.மு.க. பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்று அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனையை படைத்து உள்ளது.

பணக்காரர்களுக்கு என்று இல்லாமல் ஏழை, எளியவர்கள், நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பினருக்கும் நன்மைகளை செய்யக்கூடிய திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது.

நான் அண்மையில் கியூபா நாட்டிற்கு சென்றிருந்தேன். அங்குள்ளவர்களும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியின் சிறப்புகளை பற்றி பெருமையுடன் பேசினர்.

முதல்-அமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டும் நபர் தான் அடுத்த பிரதமராக வருவார் என்று பல தரப்பினர் பேசி வந்தனர்.

ஆனால் அதையும் தாண்டி தற்போது ஸ்டாலின் தான் பிரதமராகவே வரவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இந்திய அரசியலில் எழுந்துள்ளது.

தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் 11 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு இலவச பஸ் பயணம், பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் திட்டம், பள்ளிகளில் காலை உணவு என்று சிறப்பான திட்டங்கள் எல்லாம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சிறுபான்மை மக்களுக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தம், முத்தலாக் தடை, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகிய சட்டங்களை கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்தது தி.மு.க. தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

தமிழகத்தின் அனைத்து துறைகளும் போட்டி போட்டு தி.மு.க. ஆட்சியில் செயல்பட்டு வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்களுக்காக உழைத்து வருகிறார். அவரது சாதனைகள் உலகத்தையே உற்றுப் பார்க்க வைக்கிறது.

மதவாத அரசியல் செய்து தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற நினைக்கிறது. இது ஒரு போதும் நடக்காது. அ.தி.மு.க. அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆகவே அக்கட்சியின் தொண்டர்கள் திராவிட பாரம்பரியத்தை காக்கும் தி.மு.க.விற்கு வரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.