வடக்கு , கிழக்கில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி

223 0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இம்முறை வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பேரணி ஒன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

”இன விடுதலையை தேடி முள்ளிவாய்க்காலை நோக்கி ” என்ற கருப்பொருளில் இடம்பெறும் இப்பேரணிகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்படும்.

அத்தோடு வடக்கு மாகாணத்தில் இருந்து நாளை திங்கட்கிழமையும் ஆரம்பிக்கப்பட்டு மே 18 ஆம் திகதி இரண்டு பேரணிகளும் முள்ளிவாய்க்காலை சென்றடைந்து நினைவேந்தலில் பங்கேற்கவுள்ளது.

யாழ் ஊடக மையத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் இதனை தெரிவித்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் மற்றும் பொது அமைப்புக்கள், சிவில் சமூகங்கள் போன்ற அமைப்புக்கள் இணைந்து பேரணியை மேற்கொள்ளவுள்ளன.

இதில் அரசியல்வாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், மீனவ சங்கங்கள், போக்குவரத்து அமைப்புகள் அனைவரையும் பங்கேற்குமாறு வேலன் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.