”நோ ஃ.பையர் ஸோன்” ஆவணப்படத்தைப் பார்வையிடுமாறு சிங்கள மக்களை ஊக்குவிக்க இது சரியான தருணம் – கெலம் மக்ரே

297 0

பல்லின மக்களும் ராஜபக்ஷாக்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் அடங்கிய ‘நோ ஃபையர் ஸோன்’ என்ற ஆவணப்படத்தின் சிங்கள மொழிபெயர்ப்பை அனைவரையும் பார்க்கச்செய்யவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் அப்படத்தின் இயக்குநர் கெலம் மக்ரே, உண்மையே நீதிக்கான முதற்படி என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரின்போது தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றக்காணொளிகளுடன் கூடியதாக கெலம் மக்ரேவினால் தயாரிக்கப்பட்ட ‘நோ ஃபையர் ஸோன்’ என்ற ஆவணப்படம் 9 வருடங்களுக்கு முன்னர் ‘சனல் 4’ என்ற தொலைக்காட்சி சேவையில் வெளியாகி பாரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்திருந்தது.

தற்போது அந்த ஆவணப்படத்தை சிங்கள மக்களும் பார்வையிடவேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அப்பதிவில் அவர் மேலும் கூறியருப்பதாவது:

இலங்கையில் ராஜபக்ஷாக்களுக்கு எதிராக அனைத்துச் சமூகங்களும் கிளர்ந்தெழுந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், ‘நோ ஃபையர் ஸோன்’ (யுத்த சூனியவலயம்) என்ற ஆவணப்படத்தின் சிங்கள மொழிபெயர்ப்பை அனைத்து மக்களையும் பார்க்கச்செய்வதற்கு ஊக்குவிப்பது வரவேற்கத்தக்கதாகும். அதனை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும். உண்மை எதிர்காலத்திற்கு உதவும்’ என்று கெலம் மக்ரே அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மற்றுமொரு பதிவைச் செய்திருக்கின்றார். ‘நோ ஃபையர் ஸோன்’ ஆவணப்படத்தின் சிங்களமொழிபெயர்ப்பை முதன்முதலாகப் பார்வையிடுகின்ற பலர் டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டுவருவதாக அப்பதிவில் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், ‘உண்மையே நீதிக்கான முதற்படி’ என்ற வசனத்துடன் அந்த ஆவணப்படத்தில் லிங்கைப் பதிவேற்றம் செய்திருக்கின்றார். அதனை அனைவருக்கும் பகிருமாறும் கேட்டுக்கொண்டிருக்கின்றார்.