கிபீர் சத்தம்
நாடி நரம்பை
உலுக்குகிறது !
கேட்கக்கப் போகும் அதிர்வின் சத்தம்
நமக்கு முன்பா ? – அல்லது
தூரத்திலா ?
எதுவாகினும்
சிதறித் துண்டாவது
நமது மக்களே !
நம் சாவின் முடிவு
யார் கையில் ?
சிங்களத்தின் கையிலா ?
கனத்த இதயங்களுடன்
பதுங்கு குழிக்குள்
நம் மக்கள் ..
குண்டுகள் சன்னதமாடிச்
சிதறுகின்றது ..
ஓலக்குரல்கள்
வானைப் பிளக்கின்றது ..
நாம் .. பதுங்கு குழியிலிருந்து
பதறி வெளியேறுகின்றோம் ..
மும்மாரியும் நெல்விதைத்து
பசுமை பூத்துநிற்கும்
வன்னிமண்ணில்
இரத்தமும் ,சதையும் விதைக்கப்பட்டு
பிணம் விதைத்த பூமியாக
காட்சியளித்தது வன்னிமண் ..
குற்றுயிராய்துடிப்பவரை
உழவு வாகனத்திலேற்றி
அடுக்குகின்றனர் ..
சாவின் விளிம்பில்
இருப்பவரை காப்பாற்ற
வைத்திய சாலையை நோக்கி
பயணிக்கின்றது
உழவு வாகனம் ..
அட பாவிகளா !
மனிதம் செத்த அரக்கரே !
உங்கள் கிபீரின் பசிக்கு
வைத்தியசாலையும் இரையானதே !
இதுவா போர்த்தர்மம் ?
“இதுவே இனஅழிப்பு “
இன்று ..
மருந்துக்கு ஏங்கும் நிலையில் நீங்கள் !
வருந்தித் துடிக்கும் நிலையில் நீங்கள் !
இது இயற்கை எடுத்த முடிவா ?
நீங்கள் விதைத்த வினையா ?
“ஒவ்வொரு அசைவும் – அதன்
எதிர்வினையாற்றும் சக்தி பெற்றது”
-அகரப்பாவலன்-