தமிழக மீனவர்கள் விடுதலை மத்திய வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த வெற்றி- அண்ணாமலை பெருமிதம்

206 0

யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பா.ஜ.க. அரசியல் பயணத்தில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு என்னுடைய இலங்கை பயணம். தமிழக அரசு சார்பில் இல்லாமலும், மத்திய அரசு சார்பு இல்லாமல் தனிப்பட்ட முறையில் சில முக்கிய விஷயங்களுக்காக நான் மேற்கொண்ட இந்த பயணம், உண்மையிலேயே மிக வெற்றிகரமாக அமைந்தது.
இலங்கையில் வடகிழக்கு பகுதியில் உள்ள தமிழர்களின் நிலையை அறிந்துகொள்ள என்னுடைய பயணம் உதவிகரமாக இருந்தது.
இலங்கை பயணம் குறித்த என்னுடைய விரிவான அறிக்கையை கட்சியின் உயர்மட்ட தலைவர்களுக்கு அனுப்பி வைத்தேன் அதில் விடுதலை கிடைக்காமல் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் விடுதலை குறித்தும் விரிவாக கூறியிருந்தேன்.
மத்திய அரசும் துரிதமாக செயல்பட்டு உடனடியாக அந்த மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிக்கலான சூழலிலும் மீனவர்களுக்கு கிடைத்திருக்கும் இந்த விடுதலை நமது வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த வெற்றி.
இலங்கையில் சிக்கியிருந்த தமிழக மீனவர்களை சட்ட சிக்கல் இல்லாமல் முயற்சி எடுப்பதில் தீவிர முனைப்பு காட்டி வெற்றிகரமான விடுதலைக்கு வழிவகை செய்த மத்திய மீன் வளத்துறை இணை மந்திரி முருகன், உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை அரசு ரீதியாக முன்னெடுக்கும் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளிதரன், சட்டரீதியான மீட்பு நடவடிக்கைக்கு வித்திட்ட மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், நாட்டின் கடைக்கோடி குடிமகனின் நலத்துக்காக நாளெல்லாம் திட்டமிட்டு ஓயாது உழைக்கும் பிரதமர் நரேந்திரமோடி ஆகியோருக்கு தமிழக மக்களின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.