பொலிஸாரின் வீடுகளுக்கு சேதம் விளைவிக்குமாறு சமூக ஊடகங்களில் பதிவேற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி கைது!

210 0

ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் வீடுகளுக்கு சேதம் விளைவிக்குமாறு சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து பொதுமக்களை தூண்டிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் ஒருவரை நிட்டம்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயர் இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் வீடுகளுக்கு சேதம் விளைவிப்பதில் கவனம் செலுத்துவதற்காக, அண்மைய குழப்பத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குழுக்களை அழைத்து சந்தேக நபர் தனது முகநூல் கணக்கில் பதிவிட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் நிட்டம்புவ பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று அத்தனகல்லை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

லெப்டினன்டாக கடமையாற்றியபோது முறைகேடான நடத்தை காரணமாக குறித்த சந்தேக நபர் 2020 ஜனவரி 29ஆம் திகதி இராணுவத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.