முள்ளிவாய்க்கால் – ஓர்
இனஅழிப்பில் அடையாளம்
மே 18 நம் உணர்வுகள்
குவியும் நாள் !
முறிகண்டிப் பிள்ளையார்
கோயிலடியில் – ஓர் பெண்
சோளம் விற்றுக்கொண்டு நிற்கிறாள் ..
அவள் நினைவுகளில்
முள்ளிவாய்க்காலின்
போர்க் காட்சிகள் திரும்பத் திரும்ப
வருகின்றது ..
அதிர்வுகளின் உச்சம்
காதின் செவிப்பறைகளை
கிழிக்கின்றது ..
சிதறிப் பறக்கிறது
சன்னக்குண்டுகள் ..
உயிர் தப்புவது
நம் கையில் இல்லை ..
தப்பியவனுக்கு விதி உண்டு ..
தப்பாதவனுக்கு விதி இல்லை ..
விஞ்ஞானமோ ..
பகுத்தறிவோ ..
விடை கூறமுடியாத நிலை ..
அப்பொழுதான்
அது நிகழ்கிறது ..
பரவி வெடிக்கின்றது குண்டுகள் ..
வெடித்துச் சிதறுகின்றது
கட்டிடங்கள் ..
அவள் கண்ணெதிரேயே
சிதறித்துண்டாகின்றனர்
கணவனும்,குழந்தையும் ..
ஐயோ ! என்று கத்தியவாறு ஓடினாள் ..
தன்மகளின் சிதறிய
துண்டுகளைத்தான்
பொறுக்க முடிந்தது ..
உயிரோடு கலந்த
கணவனின் உடல்
மண்ணோடு மண்ணாக
கலந்திருந்தது ..
அந்த நிமிடம்தான் – அவள்
அவர்களை கடைசியாக
பார்த்தது ..
இன்னொரு கை
அவளையும் இழுத்துக்கொண்டு
ஓடியது ..
இறுதிச் சடங்கு !
யார் யாருக்கு செய்வது ?
தாய்மண்ணே ..
தன் மக்களுக்கு
இறுதிச் சடங்கைச் செய்தது ..
ஆம் ! மண்ணில் பிறந்தவர்
மண்ணோடு கலந்தனர் ..
வாழும்வரை வாழ்வாதாரம் வேண்டுமே !
முருகண்டியான் சன்னதியில்
கனத்த வலியுடன் நிற்கிறாள்
இனவெறிப்பேயால்
வாழ்வை இழந்த ஈழத்தாள் ..
-அகரப்பாவலன்-